கிரவேசியாவுக்குத் திறந்த கதவுகள், ருமேனியாவுக்கும், பல்கேரியாவுக்கும் தொடர்ந்தும் மூடியிருக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழு டிசம்பர் 08 ம் திகதி எடுத்த முடிவின்படி கிரவேசியாவுக்கு மட்டுமே ஷெங்கன் கூட்டுறவு அமைப்பில் தற்போதைக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. “ஷெங்கன் நாடுகளில் சேரும் வாய்ப்பு சுமார் பத்து வருடங்களுக்குப் பின்னர் மேலுமொரு நாட்டுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. கிரவேசியாவை அன்புடன் வரவேற்கிறோம்,” என்று ஒன்றியத்தின் தற்போதைய தலைவரான செக் குடியரசின் பிரதமர் அறிவித்தார்.
“பல்கேரியாவுக்கும், ருமேனியாவுக்கும் அதே அந்தஸ்தைக் கொடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே ஒற்றுமையான தீர்மானம் இல்லை. எனவே, தற்போது அந்த நாடுகளைச் ஷெங்கன் கூட்டுறவில் சேர்த்துக்கொள்ளவில்லை,” என்று ஒன்றியத்தின் உள்துறை பொறுப்புக்களை வகிக்கும் இல்வா யோகான்சன் தெரிவித்தார்.
பல்கேரியாவும், ருமேனியாவும் 2007 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. ஒன்றியத்தில் சேர்ந்தாலும் கூட ஷெங்கன் கூட்டுறவில் சேரும்போதே குறிப்பிட்ட நாடுகளுடன் மற்றைய ஒன்றிய நாடுகளுக்கான எல்லைகள் முழுவதுமாகத் திறக்கப்படும். பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் தொடர்ந்தும் தமது பிராந்தியத்தின் திட்டமிட்டுச் செயற்படும் குற்றவியல் குழுக்களைக் கட்டுப்படுத்தவில்லை, லஞ்ச ஊழல்களைக் குறைக்கவில்லை, வெளியேயிருந்து அந்த நாட்டின் எல்லைகளுக்கூடாக நுழையும் அனுமதியில்லாதவர்களைத் தடுத்து நிறுத்தவில்லை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருப்பதாலேயே ஒன்றிய நாடுகள் சில அவைகளை ஷெங்கன் கூட்டுறவில் சேர்க்க மறுத்திருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்