ஒரு மாதத்தினுள் சீனாவின் மக்கள் ஆரோக்கிய சேவை கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும்!
கொரோனாத்தொற்றுக்கள் ஆரம்பித்த காலத்தில் பெரும் எண்ணிக்கையில் இறப்புக்களையும், கடுமையான நோயாளிகளையும் முதன் முதலாக எதிர்கொண்ட நாடு சீனாவாகும். அதையடுத்து நாடெங்கும் கொண்டுவரப்பட்ட கடுமையான மக்கள் மீதான நடமாட்டக் கட்டுப்பாடுகள் சமீபத்தில் திடீரென்று நீக்கப்பட்டன. அதையடுத்து தலைநகர் உட்பட நாடெங்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு நாளிலிருந்து அடுத்த நாளில் இரட்டையாகிவருகிறது.
இரண்டு வருடங்களைத் தாண்டியும் நாடெங்கும் நிலவிவந்த கொரோனாக் கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் குரலெழுப்பியதை அடுத்தே தடாலடியாக அந்த நடவடிக்கைகள் பெருமளவில் குறைக்கப்பட்டன. கட்டாயமான கொரோனாப் பரிசீலனைகளும் நீக்கப்பட்டுவிட்டன. நகரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாகியிருப்பதாக ஊடகங்கள் விபரிக்கின்றன. அதனால் கொரோனாத்தொற்று உள்ளதா என்று பரிசீலிக்காமலே மக்கள் சாதாரணமாக நடமாடுவதுடன் பொது இடங்களிலும் சந்தித்துக்கொள்கிறார்கள்.
கொரோனாக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட அடுத்தடுத்த நாட்களிலிருந்தே நாடெங்கும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகியிருப்பதால் மருத்துவ சேவைகளுக்கான தேவை படுவேகமாக அதிகரித்திருக்கிறது. மருந்துகளுக்கான கேள்வியும் பலமடங்காகியிருக்கிறது. அதேசமயம் மருத்துவ சேவையாளர்களிடையேயும் தொற்று அதிகமாகியிருப்பதால் அவர்களும் விடுமுறையில் போய்விடுகிறார்கள். மருந்துகள் தேவையான அளவில் கடைகளில் கிடைப்பதுமில்லை என்று குறிப்பிடப்படுகிறது.
நாட்டின்கடுமையான நீண்டகாலக் கொவிட் கட்டுப்பாடுகளும் தற்போதைய நிலைமைக்கு ஒரு காரணமாக விமர்சிக்கப்படுகிறது. சீனாவின் பெரும்பாலான மக்கள் தடுப்பு மருந்தைப் பெற்றிருந்தாலும் அவர்களிடையே நோய்ப்பரவல் விகிதம் அதிகளவில் இருக்கவில்லை. காரணம் அவர்கள் கொவிட் நோயாளிகளுடன் நெருங்கும் சந்தர்ப்பங்கள் இல்லாமலிருந்தது. தற்போது நோய்ப்பரவல் உள்ளவர்களும் வெளியே நடமாடுவதால் இலகுவாக கொரோனாப்பரவல் ஏற்படுகிறது. இதனால் சீனாவின் மருத்துவ சேவையானது பெரும் நெருக்கடியை வரும் வாரங்களில் எதிர்கொள்ளும் என்று நாட்டின் மருத்துவர்கள் பலர் எச்சரித்து வருகிறார்கள்.
கொரோனாக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட தற்சமயம் அந்த நோயால் இறப்புக்களின் எண்ணிக்கை பெருமளவில் உயரவில்லை. ஆனால் சுமார் ஒரு மில்லியன் பேராவது வரும் வாரங்களில் அந்த நோயால் இறப்பார்கள் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்