நத்தார் பண்டிகையையொட்டி அரசராகத் தனது முதலாவது உரையைச் சாள்ஸ் நிகழ்த்துவார்.
விண்ட்ஸரிலிருக்கும் புனித ஜோர்ஜ் தேவாலயத்திலிருந்து பிரிட்டனின் புதிய அரசர் சாள்ஸ் தனது நாட்டு மக்களுக்கான நத்தார் உரையை நிகழ்த்தவிருக்கிறார். அந்த உரையில் 70 வருடங்களுக்கு முன்னர் 1957 இல் வருடாவருடம் நத்தார் தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தும் வழக்கத்தை ஆரம்பித்து வைத்த தனது தாயாருக்கு அவர் அஞ்சலி செலுத்துவார்.
தனது பெற்றோர் நல்லடக்கம் செய்யப்பட்ட அந்த தேவாலயத்திலிருந்து மக்களுக்கான முதலாவது உரையை நிகழ்த்துவதன் மூலம் அரசர் சாள்ஸ் தான் அவர்களுடைய காலடிகளில் கடமைகளைத் தொடருவதைக் காட்ட விரும்புகிறார். டிசம்பர் 13 ம் திகதியே பதிவுசெய்யப்பட்டுவிட்ட அவரது உரையிலிருக்கும் விபரங்கள் இதுவரை வெளியாகாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
1999 இல் தனது 21 ம் நூற்றாண்டுக்கான உரையை எலிசபெத் மகாராணி புனித ஜோர்ஜ் தேவாலயத்திலிருந்து வெளியிட்டாலும் அவரது உரைகள் வெவ்வேறு வருடங்களில் வெவ்வேறு இடங்களில் பதிவுசெய்யப்பட்டன. தனது முதலாவது உரையை அவர் அரச குடும்பத்தினர் தமது நத்தார் காலத்தைச் செலவிடும் சண்டிரிங்ஹாம் மாளிகையில் பதிவுசெய்திருந்தார்.
தனது தாயார் இறந்ததையடுத்து நாட்டு மக்களுக்கான தனது முதலாவது உரையில் மகன் ஹரியையும் மேகன் ஆகியோரின் எதிர்காலத்துக்காகவும் அவர் வாழ்த்தியிருந்தார். சமீபகாலத்தில் அரச குடும்பத்தினருடன் ஹரி – மேகன் ஆகியோருக்கு மனக்கசப்புக்கள் உண்டாகியிருப்பதாகப் பல கிசுகிசுக்கள் வெளியாகியிருக்கின்றன. எனவே தனது நத்தார் உரையில் அவர்களைச் சாள்ஸ் வாழ்த்துவாரா என்ற ஆர்வம் பரவியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்