ஐந்து நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கொரோனாத்தொற்று இல்லையென்று காட்டவேண்டுமென்கிறது இந்தியா.
சீனாவில் படுவேகமாகப் பரவிவரும் கொவிட் 19 உலக நாடுகளெங்கும் மீண்டும் பீதியைக் கிளப்பியிருக்கிறது. 2020 இல் பரவ ஆரம்பித்த பெருந்தொற்றுக் காரணமாக உலகிலேயே அதிக மரணங்களை எதிர்கொண்ட இந்தியாவிலும் சீனாவின் கொவிட் 19 நிலைமை பெரும் பயத்தை உண்டாக்கியிருக்கிறது. சீனா, தாய்லாந்து, தென் கொரியா, ஜப்பான், ஹொங்கொங் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் தமக்குத் தொற்று இல்லையென்று காட்டும் சான்றிதழுடனேயே உள்ளே நுழையலாமென்று அறிவித்திருக்கிறது இந்தியா.
இந்தியாவின் எல்லைக்குள் நுழைபவர்களை பரிசீலிக்கும்போது அவர்களுக்குத் தொற்று இருப்பதாக அடையாளங்கள் காணப்பட்டால் உடனடியாகத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மக்கள் ஆரோக்கிய அமைச்சர் மனுசுக் மந்தாவியா சனியன்று தெரிவித்திருக்கிறார். விமான நிலையத்துள் வரும் 2 % பிரயாணிகளை இந்தியா கொரோனாப்பரிசோதனைக்கு உட்படுத்தும்.
இந்திய மருத்துவர்களின் உயர்மட்ட அமைப்பு கடந்த வார இறுதியிலேயே மக்களுக்கு கொவிட் 19 தொற்றுப்பற்றிய எச்சரிக்கையை வெளியிட்டது. பொது இடங்களில் முகக்கவசம் அணியும்படியும், திருமணம், விழாக்கள் போன்றவற்றைத் தவிர்க்கும்படியும், தொற்றைத் தவிர்க்கத் தேவையான மேலதிக தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும்படியும் இந்தியர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்