பணவசதியையும், அதிகாரத்தையும் தேடியலைவோரைத் தனது நத்தார் செய்தியில் கண்டித்தார் பாப்பரசர்.
வத்திக்கான் புனித பேதுருவானவர் ஆலயத்தில் பாப்பரசர் வழக்கம்போல் தனது நத்தார் சேவையை வழங்கினார். பணத்தையும், அதிகாரத்தையும் தேடியலைபவர்களால் குழந்தைகளும், பலவீனமானவர்களும், ஏழைகளும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை அவர் கண்டித்தார்.
புனித பேதுருவானவர் தேவாலயத்துக்குள் சுமார் 7,000 பேர் கூடியிருந்தார்கள். தனது முழங்காலில் நோயுற்றிருக்கும் பாப்பாண்டவர் சக்கர நாற்காலியில் இருந்தபடியே தனது சேவையை நிறைவேற்றினார். தேவாலயத்துக்கு வெளியே சுமார் 4,000 பேர் கூடியிருந்தார்கள்.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் போரை அவர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை தனது உரையின் பல இடங்களில் போரைப் பற்றியும் அதன் மோசமான விளைவுகளைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
“விலங்குகள் தங்கள் கூடுகளில் பசியாறும்போது, நம் உலகில் உள்ள மனிதர்களோ, செல்வம் மற்றும் அதிகாரத்தின் பசியில், தங்கள் அண்டை வீட்டாரையும், தங்கள் சகோதர சகோதரிகளையும் கூட விழுங்கிவருகிறார்கள். அதனால்தான் எத்தனை எத்தனையோ போர்கள்! பல இடங்களில் இன்றும் மனித கண்ணியமும் சுதந்திரமும் இழிவாகவே எதிர்கொள்ளப்படுகின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்