ஆர்மீனியாவுக்கும் நகானோ – கரபாக்குக்குமிடையே வழியை முடக்கியிருக்கும் ஆஸார்பைஜானிகள்.
ஆஸார்பைஜான் – ஆர்மீனியா நாடுகளுக்கிடையே சமாதானம் குலையாமல் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவைகள் தத்தம் பங்குக்கு அத்தலைவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன. இரண்டு தடவைகள் போர் ஆரம்பிக்கும் நிலையை எட்டிவிட்ட அந்த நாடுகளிடையே இருக்கும் மனக்கசப்போ தொடர்கிறது. பிரச்சினையின் காரணமாக இருக்கும் ஆர்மீனியர்கள் வாழும் நகானோ – கரபாக் பிராந்தியத்தை ஆர்மீனியாவுடன் இணைக்கும் பிரதான சாலையை முடக்கியிருக்கிறார்கள் ஆஸார்பைஜானிகள்.
நத்தார் தினமான ஞாயிற்றுக்கிழமையன்று நகானோ – கரபாக் பகுதியின் பெரிய நகரமான ஸ்டெபனாகெர்ட்டில் பல்லாயிரக்கணக்கானோர் குழுமினார்கள். ஆஸார்பைஜானில் வாழும் ஆர்மீனியர்களான அவர்கள் தமக்கு ஆர்மீனியாவுக்குமிடையே இருக்கும் ஒரேயொரு பிரதான வழி முடக்கப்பட்டிருப்பதை எதிர்த்து அந்த நகரில் குரலெழுப்பிப் போராட்டம் நடத்தினார்கள்.
பிரதான வழி முடக்கப்பட்டிருப்பதால் நகானோ – கரபாக்கில் வாழ்பவர்களுக்கு உணவுப்பொருட்கள், மருந்துகள் போன்றவைக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக ஆர்மீனியப் பாராளுமன்றத்திலிருந்து குரல் கொடுக்கப்படுகிறது. வழி முடக்கத்தை ஆஸார்பைஜான் அரசு வேண்டுமென்றே செய்துவருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆஸார்பைஜான் தரப்பிலிருந்து முடக்கமேதும் இல்லை, தனியார் வாகனங்கள் தாராளமாக அவ்வழியில் செல்லலாம் என்று மறுத்து வருகிறது.
அப்பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டி ஒழுங்கைப் பேண ரஷ்யாவின் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் முகாம் அமைத்திருக்கிறார்கள். அவர்கள் தமது சேவையை ஒழுங்காகச் செய்யவில்லை என்றும் ஆர்மீனிய அரசு சுட்டிக்காட்டுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்