கொசோவோவுடனான எல்லைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார் செர்பிய இராணுவத்தின் உயர் தளபதி.

1990 களில் பால்கன் பிராந்தியத்தின் நடந்த போரின் பின்னும் இன்னும் தீர்க்கப்படாமலிருந்து வரும் சிக்கல்களிலொன்று செர்பியா – கொசோவோ நாடுகளுக்கிடையேயான பகையாகும். கொசோவோவைத் தனி நாடாக அங்கீகரிக்கத் தொடர்ந்தும் மறுத்துவரும் செர்பியா அங்கே வாழும் செர்பர்ளைத் தூண்டிக் கொசோவோ அரசுக்குத் தலையிடி கொடுத்து வருகிறது. அதனால் இரண்டு நாடுகளுக்குமிடையே போர் மூழும் அபாயம் கடந்த மாதங்களில் அடிக்கடி எழுந்திருக்கிறது. சமீப வாரங்களில் ஏற்பட்டிருக்கும் கலவரங்களை எதிர்கொள்ள செர்பிய ஜனாதிபதி தனது இராணுவத் தளபதியை எல்லைக்கு அனுப்பியிருக்கிறார்.

கொசோவோ எல்லையையடுத்து வீதி முடக்கங்களை ஏற்படுத்திய அங்கு வாழும் பொலீஸ் ஒருவர் டிசம்பர் 10 திகதியன்று கொசோவோ அரசால் கைது செய்யப்பட்டதை அடுத்து அங்குள்ள செர்பர்கள் கிளர்ச்சி செய்து வருகிறார்கள். டிசம்பர் 18 ம் திகதி கொசோவோவுக்குள் செர்பர்கள் வாழும் பகுதியில் தேர்தல்கள் நடத்த அரசு திட்டமிட்டிருந்தது. அதை அங்குள்ள செர்பியக் கட்சியினர் எதிர்த்து வருகிறார்கள். தவிர கொசோவோவுக்குள் சேவையிலிருக்கும் அல்பானிய, செர்பிய பொலீசாருக்குள் கைகலப்பும் ஏற்பட்டிருக்கிறது.

கொசோவோவுக்குள் எல்லையடுத்து வாழும் செர்பர்கள் பகுதியில்  ஏற்பட்டிருக்கும் பதட்ட நிலையால் எதுவும் ஆகலாம் என்ற நிலையிலேயே தான் அங்கே கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதற்காக அனுப்பப்பட்டிருப்பதாக செர்பிய இராணுவத் தளபதி மிலான் மொய்சிலோவிச் தெரிவித்திருக்கிறார். அங்கே தனது கடமைகள் என்னவென்று திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டிருப்பதாகவும் அதைத் தான் கையாளுவேன் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

செர்பியாவுக்கும், கொசோவோவுக்கும் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் ஆயுதப் போர் ஏற்படும் அபாயகரமானது என்று செர்பியப் பிரதமர் அனா பிர்னாபிச் குறிப்பிட்டிருக்கிறார்.

நாட்டோ அமைப்பின் அமைதி காக்கும் படையினரான KFOR அவ்விரண்டு நாடுகளுக்கு இடையிலான பகுதியில் நீண்ட காலமே இருந்து வருகிறது. அவர்களின் எண்ணிக்கையும் சமீப வாரங்களில் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய பணியில் ஆயுதப்பிரயோகங்கள் நடத்தலாகாது என்ற கட்டுப்பாடு இருந்து வருகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *