அரசுக்கெதிரான நடவடிக்கைகளுக்காக ஈரான் முன்னாள் ஜனாதிபதியின் மகளுக்கும் சிறைத்தண்டனை.
உலக நாடுகள் பலவற்றின் விமர்சனங்களையும், ஐ.நா சபையின் விமர்சனத்தையும் உதாசீனம் செய்து ஈரான் தொடர்ந்தும் தனது குடிமக்களுக்குச் சிறைத்தண்டனைகளையும், மரண தண்டனைகளையும் விதித்து வருகிறது. ஒழுங்காகத் தலையை மூடவில்லை என்ற காரணத்துக்காகக் காவலில் வைக்கப்பட்ட 22 வயதான மாஷா அமினியின் இறப்பு ஆரம்பித்து வைத்த போராட்டங்களும் ஈரானில் தளர்வின்றித் தொடர்ந்து வருகின்றன. பெண்களின் உரிமைகளை மதிக்கவேண்டும் என்று குரல்கொடுப்பவர்கள் முக்கிய தலைவர்களின் உறவினர்களானாலும் அவர்களையும் அரசு விட்டுவைக்கவில்லை.
முன்னாள் ஈரானிய ஜனாதிபதியான அக்பர் ஹஷீமி ரவ்சஞ்சானியின் மகளான பாஸே ரவ்சஞ்சானி அரசுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு 5 வருடங்கள் சிறைக்கனுப்பப்பட்டிருக்கிறார். பாஸே ரவ்சஞ்சானி 2012 இலும் கைது செய்யப்பட்டுச் சிறைக்கனுப்பப்பட்டவராகும். ஈரானிய அரச கோட்பாடுகளுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்புவர் என்பதால் அவர் அரசியலில் ஈடுபடலாகாது என்றும் நீதிமன்றம் ஒதுக்கிவைத்திருந்தது.
2017 இல் மறைந்த ஹஷீமி ரவ்சஞ்சானி ஈரானில் இஸ்லாமியக் குடியரசை நிறுவியவர்களில் ஒருவராகும். அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஈரான் மென்மையான இஸ்லாமியக் கோட்பாடுகளை அனுசரித்து வந்தது. மேற்கு நாடுகளுடன் நட்பாக நடந்து சர்வதேச வர்த்தகங்களில் ஈடுபட்டு ஈரானின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது.
நான்கு மாதங்களாகத் தொடர்ந்து ஈரானிய ஆன்மீகத் தலைவர்களை எதிர்த்து நடந்துவரும் போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் மேலும் மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மூவரும் பாதுகாப்புப்படையினரைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்கள். அவர்களையும் சேர்த்துக் கடந்த நான்கு மாதங்களில் 17 பேருக்கு ஈரான் மரண தண்டனை வழங்கியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்