உக்ரேன் அரண்மனை + தெலுங்குப் பாடல் = கோல்டன் குளோப் பரிசு.
2009 ம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருது விழாவில் முதன் முதலாக இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் இசையமைப்பில் உருவான “ஜெய் ஹோ ….” பாடல் விருதொன்றைப் பெற்றிருந்தது. 2023 ம் ஆண்டுக்கான சர்வதேச கோல்டன் குளோப் விழாவில் 2022 இன் சினிமாவில் அசல் தன்மையுள்ள இசைப்படைப்பு என்ற விருதைத் “RRR” சினிமாவின் தெலுங்குப் பாடலான “நாட்டு நாட்டு ….” தட்டிக்கொண்டு போயிருக்கிறது.
மரகதமணி என்ற பெயரில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான எம்.எம். கீரவாணி இசையமைத்த “நாட்டு நாட்டு ….” பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். அவரது மகனான கால பைரவன், ராகுல் சிப்லிகுஞ்ச் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். ராஜமௌலி அந்தச் சினிமாவை இயக்கியிருக்கிறார். இந்தியா சுதந்திரமடைவதற்கான போராளிகள் பற்றிய கற்பனைக் கதையாகும் அந்தச் சினிமா.
“நாட்டு நாட்டு ….” பாடல் படமாக்கப்பட்ட இடம் தற்போது சர்வதேச அளவில் பேசப்பட்டு வரும் உக்ரேன் ஆகும். உக்ரேன் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான கியவ் நகரிலிருக்கும் மெரிலின்ஸ்கி அரண்மனைக்கு முன்னால் அந்தப் பாடல் 2021 ஆகஸ்ட் மாதத்தில் படமாக்கப்பட்டது. உக்ரேன் பாராளுமன்றத்துக்கு அருகேயிருக்கும் அந்த அரண்மனை 17ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ரஷ்ய மகாராணி எலிசபெத்தால் கட்டப்பட்டதாகும். பனிரெண்டு வருடங்களாகப் பொதுமக்களுக்கு மூடப்பட்டு திருத்த வேலைகள் நடந்த அந்த அரண்மனைக்குள் 2020 இல் மீண்டும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
சாள்ஸ் ஜெ. போமன்