“எங்கள் நாட்டிலிருந்து போர்வீரர்களை வாடகைக்கு எடுப்பதை நிறுத்துங்கள்,” ரஷ்யாவிடம் சொன்னார் செர்பிய ஜனாதிபதி.
தங்கள் சார்பில் உக்ரேனில் சென்று போரில் ஈடுபடுவதற்காக ரஷ்யா இராணுவ வீரர்களை வாடகைக்கு எடுத்து வருவது தெரிந்ததே. அதற்காக செர்பிய சமூகவலைத்தளங்கள், ஊடகங்களில் ரஷ்யத் தனியார் இராணுவ நிறுவனம் விளம்பரங்களைப் பிரசுரித்து வருகிறது. செர்பிய மொழியில் அப்படியான விளம்பரங்களைத் தனது நாட்டில் வெளியிடுவதை நிறுத்தும்படி ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிச் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பகிரங்கமாகக் கோரினார்.
“செர்பியாவில் இருந்து வாடகைக்கு இராணுவ வீரர்களை எடுப்பது சட்டத்துக்குப் புறம்பானதென்று தெரிந்தும் ஏன் நீங்கள் அப்படியான விளம்பரங்களைப் பிரசுரிக்கிறீர்கள்?” என்று அவர் தனியார் இராணுவமான Wagner நிறுவனத்தை விமர்சித்தார்.
தனியார் இராணுவங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டு வேறு நாடுகளில் போர்புரியச் செல்வது செர்பியச் சட்டத்தின்படி தண்டனைக்குரியது. ஆயினும்கூட 2014 முதல் ரஷ்யாவுக்காக உக்ரேனுக்கு எதிராகப் போர்புரிவதற்கு செர்பர்கள் போய்வருகிறார்கள். பாரம்பரியம், கலாச்சார ரீதியாக ரஷ்யாவுக்கான ஆதரவு செர்பியாவில் கணிசமாக இருப்பதால் செர்பியர்கள் ரஷ்யாவுக்காகப் போர்புரிய விரும்பிச் செல்வதுண்டு. அவர்களின் எண்ணிக்கை எத்தனை என்பது இதுவரை தெரியாது.
பால்கன் நாடான செர்பியா புவியியல் ரீதியில் ஐரோப்பாவுக்கு அருகேயிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்துகொள்ளும் நோக்கத்தில் விண்ணப்பித்தைச் சமர்ப்பித்துவிட்டு அதற்கான மாற்றங்களைத் தமது நாட்டில் கொண்டுவருவதில் ஈடுபட்டிருக்கிறது. அதே சமயம் ரஷ்யாவுக்கான ஆதரவு மக்களிடையே கணிசமாக இருப்பதால் செர்பிய அரசு இரண்டு விதமான விருப்பங்களிடையே தள்ளாடி வருகிறது.
பொருளாதார, வர்த்தக ரீதியில் ஐரோப்பாவைத் தனது முக்கிய துணையாகக் கொண்டிருக்கும் செர்பியா எரிபொருள் தேவைக்காகத் தொடர்ந்தும் ரஷ்யாவையே தங்கியிருக்கிறது. ரஷ்யாவின் விமானங்களுக்காகத் தனது வான்வெளியைத் தடைசெய்யாத ஒரேயொரு ஐரோப்பிய நாடாகவும் செர்பியா இருந்து வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்