50,000 வருடங்களாகப் பூமியிலிருந்து காண முடியாத வால் நட்சத்திரமொன்று நெருங்கிக்கொண்டிருக்கிறது.
இந்த வாரங்களில் பூமியை நெருங்கிவருகிறது ஒரு வால் நட்சத்திரம். சுமார் 50,000 வருடங்களாகப் பூமியிலிருந்து காண முடியாத அந்த நட்சத்திரமானது புவியிலிருந்து சுமார் 42 மில்லியன் கி.மீ தூரத்தில் கடந்துசெல்லவிருக்கிறது. நீலம், பச்சை நிறங்களுடன் மஞ்சள் நிற வாலை அந்த வால் நட்சத்திரம் கொண்டிருப்பதாகத் தெரியும்.
பெப்ரவரி முதலாம் திகதியன்று அந்த வால் நட்சத்திரம் பூமிக்கு நெருங்கிய தூரத்திலிருக்கும். ஜனவரி மாதக் கடைசி நாட்களில் அது வட துருவத்தில் இருந்து தொலை நோக்கிகள் மூலம் காணக்கூடியதாக இருக்கும். நகரங்களின் ஒளியூட்டப்படாத பகுதிகளிலிருந்து முகில்கள் வானத்தை மறைக்காத சமயத்தில் வெறும் கண்ணாலும் அதைக் காணலாம்.
வால் நட்சத்திரங்கள் சூரியக் குடும்பத்தின் ஆரம்ப காலத்தில் உண்டாகியவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சூரியக்குழும்பத்தின் வெளிப்பகுதிகளில் உள்ள பாகங்கள் உறைந்த நிலையிலிருப்பவை. எனவே வால் நட்சத்திரங்களின் பாகங்களும் அவற்றிலிருந்தே உருவானவையாக இருக்கும். குறிப்பிட்ட வால் நட்சத்திரம் பூமியை நெருங்கும்போது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அதைக் கவனித்து அதன் மூலப்பொருட்களைப் பற்றித் தெரிந்துகொள்ள முயல்வார்கள். அதன் மூலம் சூரியக் குடும்பம் ஆரம்பமாகிய காலத்தைப் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு.
சாள்ஸ் ஜெ. போமன்