கவிழ்ந்துகொண்டிருக்கும் அதானியின் வர்த்தக சாம்ராச்சியத்தால் இந்தியப் பொருளாதார்ம் பாதிக்கப்படுமா?
இரண்டு வாரங்களுக்கு முன்புவரை ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராகவும், உலகின் 3 அதிக சொத்துள்ளவராகவும் திகழ்ந்த கௌதம் அதானியின் வர்த்தகச் சாம்ராச்சியம் தொடர்ந்து ஆறு நாட்களாகப் பங்குச்சந்தையில் சிதறியடிக்கப்பட்டு வருகிறது. அதானி நிறுவனங்களின் பங்குச்சந்தை வீழ்ச்சியானது மொத்தமாக இந்தியப் பங்குச்சந்தையைக் கவிழ்த்து நாட்டின் பொருளாதாரத்துக்கும் பலத்த அடியைக் கொடுக்குமா என்ற கேள்வி சர்வதேச அளவில் கேட்கப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த பங்குச்சந்தை வர்த்தக நிறுவனமான ஹிண்டன்பெர்க் ஜனவரி மாதக் கடைசிப்பகுதியில் அதானியின் வர்த்தக சாம்ராச்சியத்தின் நிறுவனங்கள் திட்டமிட்டுப் பெரும் மோசடிகளைச் செய்தே அதன் பெறுமதியை ஊதிப்பெரிதாக்கியிருப்பதாக விபரங்களுடன் குற்றஞ்சாட்டியிருந்தது. பெரும் கடன் சுமை, மத்திய கிழக்கில் கருப்புப்பணச் சேமிப்பு, பொய்ப்பெயரில் நிறுவனங்கள் மூலம் பங்குச்சந்தையில் வியாபாரம் போன்ற பல குற்றங்களைச் சாட்டி அதானி நிறுவனங்களின் 75 % பெறுமதி சட்டவிரோதமான நடவடிக்கைகளால் ஊதிப்பெரிதாக்கப்பட்டதே என்றது ஹிண்டன்பர்க் அறிக்கை.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பதிலளிக்க அதானி முயன்றாலும் அவைகளில் போதுமான விபரங்கள், பதில்கள் இருப்பதாகப் பங்குச்சந்தை ஏற்றுக்கொள்ளாததால் அடுத்தடுத்த நாட்களில் பங்குகளின் பெறுமதி பெருமளவு வீழ்ச்சியடைந்தது. வார இறுதியை நெருங்கும்போது அதானியின் சொத்தின் பெறுமதியானது சுமார் 110 பில்லியன் டொலர் பெறுமதியால் குறைந்தது. உலகப்பணக்காரர்களில் 3 வது இடத்திலிருந்து 21 வது இடத்துக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார்.
அதானி சாம்ராச்சியத்தைப் பங்குச்சந்தை சிதைத்தது இந்தியப் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. பா.ஜ.க அரசு அதானி மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவேண்டும், அதுபற்றி நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென்று கேள்விகள் முன்வைக்கப்பட்டு அதுபற்றிய சர்ச்சைகளில் கடந்த இரண்டு நாளும் பாராளுமன்றம் மீண்டும், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
பங்குச்சந்தைகளில் வியாபாரம் செய்யும் நிறுவனங்களைக் கண்காணிக்கும் குழுவுக்கே அதுபற்றிய அதிகாரம், கருவிகள் இருப்பதாக இந்திய அரசு குறிப்பிடுகிறது. மத்திய வங்கி நாட்டின் வங்கிகளிடம் அதானி நிறுவனங்களின் கடன்கள் பற்றிய விபரங்களைக் கோரியிருக்கிறது. பங்குச்சந்தைக் கண்காணிப்பு அமைப்பு அதானி நிறுவனம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. ஹிண்டன்பர்க் அறிக்கையில் இந்தியப் பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பிடமிருந்து தாம் விபரங்களைப் பெற்றுக்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதுபற்றி இதுவரை அந்த அமைப்போ இந்திய அரசோ மூச்சுவிடவில்லை.
இந்தியப் பொருளாதார அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுபற்றிக் குறிப்பிடுகையில், “அதானி நிறுவனங்களின் வீழ்ச்சி இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படையை அசைக்கவில்லை, இந்தியாவின் வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவை பற்றிய நம்பிக்கைக்கும் பாதகமேதும் ஏற்படுத்தவில்லை,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
“பிரதமர் மோடியைப் போல நானும் குஜராத் மாநிலக்காரன் என்பதால் என் மீது வேண்டுமென்றே குறிவைக்கிறார்கள்,” என்று குறிப்பிட்டிருக்கிறார் கௌதம் அதானி. தான் என்றுமே ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டதில்லை என்றும் ஹிண்டன்பெர்க் அறிக்கை முழுவதுமே பொய்யென்றும் அவர் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு வருகிறார். 60 வயதான கௌதம் அதானி தனது 16 வயதிலேயே பாடசாலைப் படிப்பை உதறிவிட்டு வெளியேறியவர். அதானி எண்டர்பிரைசஸ் 1993 இல் ஆரம்பிக்கப்பட்டு அதற்கடுத்த வருடம் மும்பாய் பங்குச்சந்தையில் விற்பனைக்கு வந்தது. அதையடுத்து குஜராத்தின் முந்ரா துறைமுகத்தில் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்த அதானி அது உட்பட உலகின் பல துறைமுகங்களையும் கையகப்படுத்தியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்