உன் நினைவில் ..!
உயிரிலே கலந்து விட்டாயே.
அன்பே! எங்கோ இருந்து என்னை ஆட்சி செய்கிறாய் உன் நினைவுகளால்
மனதில் நீ இருந்தால் மறந்து விடலாம்
உயிரில் கலந்து விட்டாய் உன்னை மறப்பதும்
உயிரை இழப்பதும் ஒன்று தான் எனக்கு..
மறக்க முயலுகிறேன் மறந்தும் நீ என்னை
தொடர்பு கொள்ளாமல் இருந்தால்…
ஆயிரம் முறை உறுதி அளித்துள்ளேன் உனக்கு
உன்னை விட்டு விலகுகிறேன் என்று…
உரைத்த ஓரிரு நாட்களில் என்னை தேடி ஓடிவரும் உன் குறுஞ்செய்திகளை காணும் ஒரு நொடியில்
உடைந்துவிடுகிறது என் உறுதிகள் அனைத்தும்..
உன் நினைவுகளின் தாக்கத்தால் என்
நிலை மறந்து உன் நலம் மட்டுமாவது
அறிய தருவாயா என தொடர்பு கொண்டுள்ளேன்
உன்னை…
உன் உள்ளத்தின் மகிழ்வுக்காய் அனைத்தயும்
மறந்த எனக்கு உனக்காய் உன் தொடர்பிலிருந்து
விலகி இருப்பது வேதனையன்று…
நிஜத்தில் மட்டுமே விலகி இருக்கிறேன்
நினைவுகளில் என்றும் உன்னுடனே தான் என் வாழ்க்கை.
இன்று விலகுகிறேன் என்றாவது உன்னை
சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்…
முன்புபோல் எடுத்த உறுதி உடையாமல் இருக்க
உன் தொடர்பில் நான் இல்லாதிருந்தால் போதும் என உரைத்திருப்பேன்.
உன்னிடம் உரைத்த அடுத்த நொடியில் அன்பாய் நீ என்னை அழைத்து விடாதே உடைந்தாலும் உடைந்துவிடும் மீண்டும்
ஓர் உறுதி..
உஷா வரதராஜன்.