ஒன்பதே வயதான அமெரிக்காவின் கறுப்பினச் சிறுமியொருத்தியை பொலீஸ் கைவிலங்கிட்டு கண்ணெரிச்சலை உண்டாக்கும் வாயுவைப் பாவித்தது.
அமெரிக்காவின் மிகப்பெரும் பிரச்சினைகளிலொன்றான இனவாதம், பொலீஸ் அராஜகம் போன்றவற்றை ஜோ பைடனின் அரசு நேரிடக் காலம் வந்துவிட்டது. ரோச்சஸ்டர் நகரில் ஒன்பது வயதுச் சிறுமியொருத்தியைக் கைவிலங்கிட்டு, கண்களுக்குள் எரிச்சல் புகையால் தாக்கிக் காருக்குள் பொலீஸ் ஏற்றும் படங்கள் வெளியாகியிருக்கின்றன.
குறிப்பிட்ட சிறுமி கடும் மனோவியாதியால் பாதிக்கப்பட்டுத் தனது உயிருக்கும், தனது தாயின் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் நிலைமையிலேயே அதைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாக பொலீஸ் உயரதிகாரி குறிப்பிடுகிறார். அவள் தனக்குத் தானே காயங்கள் ஏற்படுத்தாமலிருக்கத் தடுப்பதற்காகவே அவளுக்குக் கைவிலங்குகள் போட்டதாக அவர் விளக்கினார்.
வெளிவந்திருக்கும் படங்கள் கொதிப்பை உண்டாக்கியிருக்கின்றன. ஜோர்ஜ் புளொய்ட் என்ற கறுப்பின அமெரிக்கர் பொலீஸ் கைதால் கொல்லப்பட்ட போது, கடந்த மே மாதப் பகுதியில் அமெரிக்காவெங்கும் வெடித்த போராட்டங்கள் மீண்டும் நினைவுபடுத்தப்படுகின்றன.
நடந்திருப்பதைக் கண்டித்த ரோச்சஸ்டர் நகரின் நகரபிதா லவ்லி வாரன் அதுபற்றி ஆராய்வு நடாத்தப்படுமென்றும் நகரின் பொலீஸாரின் கையாள்வுகள் மறுபரிசீலனை செய்யப்படுமென்றும் தெரிவித்திருக்கிறார்.
விரைவில் நடக்கவிருக்கும் நகரபிதா தேர்தலில் மீண்டும் பங்குபற்றப்போவதாகச் சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்திருக்கும் லவ்லி வாரன் பொருளாதாரக் கையாடல் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர். சாள்ஸ் ஜெ. போமன்