கானொன் இயக்க ஆதரவாளரான ரிப்பப்ளிகன் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரை ஒதுக்கத் திட்டம்.
முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்களான கானொன் இயக்கத்தினரில் ஒருவர் மஜொரி டெய்லர் கிரீன் தனது ரிபப்ளிகன் கட்சிக்காரர்களுக்குத் தலைவலியாக இருந்து வருகிறார். டிரம்ப்பின் ஆதரவைப் பெற்றவராகக் கருதப்படும் அவரைக் கட்சி, பாராளுமன்ற வேலைகளிலிருந்து ஒதுக்கிவைக்கும் நடவடிக்கைகள் நடந்துவருகின்றன.
https://vetrinadai.com/news/qanon-joe-biden-inaguration/
செனட்சபையின் ரிபப்ளிகன் கட்சித் தலைவர் மிச் மக்டொனால்ட் மஜோரி உதிர்த்துவரும் பல கருத்துக்களால் கட்சியின் பெயருக்கு மிகப் பெரும் அவமானம் நேர்ந்து வருவதாகக் கருதுபவர்களில் ஒருவர். “உள்ளடக்கமேயில்லாத வெறும் கட்டுக்கதைகளைக் கயிறு திரித்துப் பொய்களையும் பரப்பிவருபவர்கள் எங்கள் கட்சிக்குப் புற்று நோய் போலாகியிருக்கிறார்கள். அமெரிக்காவோ, எங்கள் கட்சியோ எதிர்நோக்கும் சவால்களுக்கு இப்படிப்பட்டவர்களால் எதையும் உதவ முடியாது,” என்கிறார் அவர்.
நவம்பரில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுப் பாராளுமன்றத்துக்குள் நுழைந்த மஜோரி ஜனவரியில் தான் பதவியேற்றார். சாத்தானை வணங்குபவர்களால் அமெரிக்கா இயக்கப்படுகிறதென்று நம்பும் கானொன் அமைப்புக்கு ஆதரவு கொடுத்துவரும் மஜோரி, டொடான்ட் டிரம்ப் தேர்தலில் தோல்வியடையவில்லையென்று தொடர்ந்தும் பேசி வருகிறார்.
அமெரிக்காவின் பாடசாலைகளில் நடந்த துப்பாக்கித் தாக்குதல்களெல்லாம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை, கலிபோர்ணியா மாநிலத்தில் பரவிய காட்டுத்தீ சியோனிஸ்ட் கதிர்களால் வானத்திலிருந்து அனுப்பப்பட்டவை, என்றெல்லாம் பகிரங்கமாகச் சொல்லிவரும் மஜோரி, டெமொகிரடிக் கட்சி அரசியல்வாதிகளைக் கொல்லவேண்டும், போன்ற சமூகவலைத்தளக் கருத்துக்களுக்குத் தனது ஆதரவைப் பல தடவைகள் தெரிவித்திருக்கிறார்.
பாராளுமன்றத்தின் கல்வி, வரவுசெலவுத் திட்டக் குழுக்களில் அங்கத்தினராகியிருக்கும் மஜோரியை அவைகளிலிருந்து வெளியேற்றப் பாராளுமன்றத்தில் ஒரு வாக்கு வித்தியாசமே போதும். 221 – 211 என்ற பெரும்பான்மையை அங்கே வைத்திருக்கும் டெமொகிரடிக் கட்சியினர் அதையே செய்யவிருப்பதாகச் சொல்கிறார்கள். அவர் பேசுவதை நிறுத்த முடியாவிட்டாலும் அவரிடம் இருக்கும் அதிகாரங்களை அகற்றிவிடுவதென்று அவர்கள் முடிவுசெய்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்