பாரிஸ் ஒலிம்பிக்கை ஒட்டி ஈபிள் கோபுரத்துக்குபொன் வர்ணப் பூச்சு!
பாரிஸின் இரும்பும் பெண்ணான ஈபிள் கோபுரம் 2024 ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு எழில் கோலம் பூணவுள்ளது.
ஈபிள் கோபுரம் அதன் 136 வருட வரலாற்றில் முதல் முறையாக மிகச் சிறப்பான மறுசீரமைப்பைச் சந்திக்கின்றது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன் தற்போதைய பளுப்பு மண் நிறம் மாற்றப்பட்டு பொன் நிறத்தில் மிளிரும் வண்ணம் புதிய வர்ணப் பூச்சு வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் 19 தடவைகள் பூசப்பட்ட வர்ணப் பூச்சுகள் அகற்றப்பட்டு கோபுரம் முழுவதுமாக சுத்திகரிக்கப்பட்ட பிறகு பொன் நிறத் தெறிப்பை ஏற்படுத்தக் கூடியவாறு மஞ்சள் மண் நிற வண்ணம் (yellow-brown) பூசும் வேலைகள் ஆரம்பிக் கப்பட்டுள்ளன என்று கோபுரத்தைப் பராமரிக்கும் நிறுவனத்தின் உயர் அதி
காரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
1968 இல் இருந்து கோபுரம் அதன் தற்போதைய பளுப்பு மண்ணிறத் திலேயே தோற்றமளிக்கின்றது.
2.5 மில்லியன் இரும்பு ஆணிகளால் 18 ஆயிரம் இரும்புச்சட்டங்கள் கொண்டு பொருத்தப்பட்ட – 324 மீற்றர்கள் உயரம் கொண்ட – கோபுரத்தின் சீரமைப்புப் பணிகள் 50 மில்லியன் ஈரோக்கள் செலவில் நடைபெறவுள்ளன.
தற்சமயம் கோபுரத்தின் பழைய வர்ணப் பூச்சுகளை சேதம் ஏதும் இன்றி அகற்றும் வேலைகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உலகில் ஆண்டு தோறும் மிக அதிக எண்ணிக்கையானவர்களால் பார்வையிடப்பட்டுவரும் உலக அதிசயமாகிய ஈபிள் கோபுரம் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை பாதுகாப்புக் கருதி வண்ணப்பூச்சு செய்யப்படுவது வழக்கம். ஆனால் அதன் அடிப்படை நிறம் மாற்றப்படுவது 1968 ஆம் ஆண்டின் பின்னர் இதுவே முதல் முறை ஆகும்.
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் ஈபிள் கோபுரம் கவர்ச்சிகரமான முக்கிய பங்கை வகிக்க உள்ளது. சைக்கிள் மற்றும் திறந்த வெளி நீச்சல் போன்ற போட்டிகளை ஈபிள் கோபுரத்தைப் பின்னணியாகக் கொண்ட சென் நதி
(river Seine) பகுதியில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளைக் காணத் திரளும் வெளிநாட்டவரை மகிழ்விப்பதற்காகப் பல இன்னிசை நிகழ்ச்சிகளும் ஈபிள் கோபுர சூழலில் நடத்தப்படவுள்ளன. அவற்றுக்காகவெல்லாம் அது இப்போதிருந்தே தன்னை அலங்கரித்துப் புதுக் கோலம் கொள்ளத் தயாராகி வருகின்றது.
(படம் :கோபுரத்தில் வர்ணப் பூச்சுக்கான முன் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருக் கின்ற தொழிலாளர்கள்)
——————————————————————-
குமாரதாஸன். பாரிஸ்.