கொரோனாத்தொற்றுக்களை டென்மார்க் கையாண்டுவரும் விதத்தை எதிர்த்துப் பேரணி.
டென்மார்க்கில் கொரோனாத் தொற்றுக்கள் ஏற்பட்ட காலத்திலிருந்து நாட்டின் அரசு அதைக் கையாலும் வழிகள் சர்வாதிகாரத்தனமானவை என்று குறிப்பிட்டுச் சுமார் 800 – 1000 க்கும் மேற்பட்டவர்கள் கொப்பன்ஹேகனில் சனியன்று தமது எதிர்ப்பைக் கலவரமற்ற முறையில் காட்டினார்கள்.
கடுமையான கட்டுப்பாடுகளின் கீழேயே தொடர்ந்தும் இருக்கும் டென்மார்க்கின் அந்தப் பேரணி கடுமையாகப் பொலீசாரால் கண்காணிக்கப்பட்டது. நாட்டின் பிரதமரான மெத்த பிரெடரிக்ஸனை வட கொரியாவின் சர்வாதிகாரியுடன் ஒப்பிட்டுக் கூக்குரலிட்டனர் பேரணியில் பங்குபற்றியவர்கள்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்த இதே போன்ற எதிர்ப்பு அணியொன்றில் டென்மார்க்கின் பிரதமரின் பொம்மையின் கழுத்தில் “இவரது உயிரை எடுக்கவேண்டும்,” என்ற செய்தியுடன் எரித்தனர். அந்த நிகழ்ச்சியில் பிரதமரின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க முயன்ற குற்றத்துக்காக இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
Men in Black Denmark என்ற பெயரில் உண்டாகியிருக்கும் ஒரு அமைப்பினர் இப்படியான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். கடந்த வாரம் டென்மார்க்கில் அறிவிக்கப்பட்ட “கொரோனாக்கடவுச்சீட்டு” திட்டமும் பலரின் எதிர்ப்பைச் சம்பாதித்திருக்கிறது.
கொவிட் 19 தடுப்பு மருந்துகளைப் போட்டுக்கொள்வது கட்டாயமில்லை என்ற நிலைப்பாட்டை டென்மார்க் எடுத்திருக்கும்போது தடுப்பு மருந்துகள் பெற்றிருப்பவர்கள் மட்டும் வெளிநாடுகளுக்குப் பிரயாணம் செய்ய அனுமதிக்கப்படுவது, குறிப்பிட்ட பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவது தனி மனித உரிமைகளை மீறும் செயலென்று போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கருதுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்