‘திட்டமிட்டபடி இராணுவத்தை வாபஸ் வாங்குங்கள்’, என்று ஆப்கான் தலிபான்கள் நாட்டோவுக்கு எச்சரிக்கிறார்கள்.

ஜோ பைடன் அரசுக்கு டொனால்ட் டிரம்ப் விட்டுப்போன தலையிடிகளில் ஒன்று ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க மற்றும் நாட்டோ துருப்புக்களை முழுவதுமாக வாபஸ் வாங்குவதாகக் கொடுக்கப்பட்ட உறுதிமொழியும், முடிவுமாகும். நீண்ட காலமாகத் தலிபான்களுடன் கத்தாரில் நடந்துவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் அடித்தளங்களில் ஒன்றாக அது இருந்து வருகிறது. 

எனவே தான், அடுத்த வாரம் நடக்கவிருக்கும் நாட்டோ அமைப்பின் அங்கத்துவர்களின் கூட்டத்தில் விவாதிக்கப்படவிருக்கும் ஒரு விடயமான ‘ஆப்கானிஸ்தானிலிருந்து நாட்டோவின் இராணுவத்தினரை வாபஸ்பெறுவதா, இல்லையா,’ என்பது பற்றித் தலிபான்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

“எங்கள் நாட்டின் மீதான ஆக்கிரமிப்பைத் தொடருதல் உங்களுக்கோ, உங்களுடைய அல்லது எங்களுடைய நாட்டு மக்களுக்கோ நல்ல விளைவைத் தராது. எங்கள் மண்ணை விடுவிப்பதற்கான புனிதப் போரைத் தொடருவோம்,” என்பதே நாட்டோ தலைவர்களுக்கான எங்கள் செய்தி என்கிறார்கள் தலிபான்கள்.

பதவிக்கு வந்த ஜோ பைடன் ஆப்கானிஸ்தானில் இருக்கும் நாட்டோ படையினரை ஒப்பந்தப்படி மே 2021 இல் வாபஸ் பெறுவதை நிறுத்தலாமா என்று யோசிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அதைச் செய்வது அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதி என்று தலிபான்கள் குறிப்பிட அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு, தலிபான்கள் தாம் செய்துகொண்ட ஒப்பந்தப்படி நாட்டினுள் சாதாரண மக்களைக் கொல்வதை நிறுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

தற்போதைய நிலையில் நாட்டோ இராணுவம் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தாலும், வாபஸ் வாங்கப்பட்டாலும் வெவ்வேறு வகைகளில் மோசமான விளைவுகளையே தருமென்று தெரிகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *