கொரோனாக் கட்டுப்பாடுகளை மீறும்படி கேட்டுக்கொள்ளும் பேஸ்புக் குழுவின் பக்கம் மூடப்பட்டது.
டென்மார்க்கில் இம்மாதம் முடியும்வரை நடைமுறையிலிருக்கும் பொது முடக்கக் கட்டுப்பாடுகளை எதிர்த்துச் சில ஆயிரம் பேர் குரலெழுப்பி வருகிறார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் சுமார் 10,000 பேரைக் கொண்ட பேஸ்புக் குழு மூலம் தமது கருத்துகளைப் பரப்பி வந்தனர்.
பெப்ரவரி 15 ம் திகதி சிறுதொழில்கள் செய்யும் கடைகளை அரச கட்டுப்பாடுகளை மீறித் திறக்கும்படி அந்தப் பேஸ்புக் குழுவில் எல்லோரையும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அவர்கள் கொரோனாத் தொற்றுக்கள் திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய், அதை வைத்து அரசு மக்களைத் தனது கட்டுப்பாட்டில் இயக்குகிறது போன்ற கருத்துக்களைக் குறிப்பிட்டிருந்தார்கள்.
இன்று திங்களன்று கடைகளைத் திறக்கும்படி கேட்டுக்கொண்டதையடுத்து அக்குழுவினரின் பக்கத்தை பேஸ்புக் மூடி விட்டது. அது ஒரு சர்வாதிகாரத்தனம் என்று குறிப்பிடுகிறார் அந்தப் பேஸ்புக் குழுவின் தலைவர் தோக்கில் போல்சன்.
சமூக விலகல்கள் அவசியமில்லை, கொரோனாத் தொற்றுக்களைப் பொய்யென்று குறிப்பிட்டு வருவதால் அப்பக்கம் முடக்கப்பட்டதாகப் பேஸ்புக் குறிப்பிடுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்