அராபிய வசந்தக் கிளர்ச்சிகளின் பத்து வருட நினைவு தினம் பஹ்ரேனிலும் அனுஷ்டிக்கப்பட்டது.

துனீசியா, எகிப்து போன்ற நாடுகளைப் போலவே 2011 பெப்ரவரியில் இல் குட்டி அரபு நாடான பஹ்ரேனிலும் நாட்டின் அல் கலீபா குடும்பத்தின் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சிகள் எழுந்தன. தோல்வியடைந்தாலும் அக்கிளர்ச்சிகளை ஞாபகப்படுத்தும் சிறு ஊர்வலங்கள் வெவ்வேறு நகரங்களில் ஞாயிறன்றும் நடத்தப்பட்டன.

2011 இல் பஹ்ரேனில் ஆக்ரோஷமாக எழுந்த ஊர்வலங்களிலும் கலவரங்களிலும் நாட்டின் ஒடுக்கி வைக்கப்பட்ட ஷீயா முஸ்லீம்கள் பெரும்பான்மையாகப் பங்குபற்றியிருந்தனர். பக்கத்து நாடான சவூதி அரேபியாவின் உதவியுடன் அந்தப் போராட்டங்களில் பங்குபற்றியவர்களை அல் கலீபா அரசு கடுமையான முறையில் கையாண்டது. பொலீஸ், இராணுவ அராஜகம் மட்டுமன்றிக் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றங்கள் மூலமாகத் தண்டிக்கவும் செய்தார்கள்.

அதன் பின்பு வருடாவருடம் பெப்ரவரி மாதத்தில் 2011 இன் எழுச்சிப் போராட்டங்கள் சிறிய அளவில் ஊர்வலங்களால் ஞாபகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஞாயிறன்று நடந்த ஊர்வலங்களில் பெரும் பொலீஸ் பாதுகாப்புக்கள் இருந்ததாகத் தெரியவருகிறது. கொரோனாப் பரவலைத் தடுக்க என்ற காரணத்துடன் அளவுக்கதிகமான பொலீஸால் மக்கள் கூடல்களைக் கண்காணித்தனர். வன்முறைகளெதுவுமின்றி ஊர்வலத்தில் மக்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *