பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் தங்கள் தளத்தில் பகிரப்படும் செய்திகளுக்காக ஒரு தொகையைக் குறிப்பிட்ட செய்தி நிறுவனங்களுக்குக் கொடுப்பார்கள்.
“செய்தி நிறுவனங்களிலிருந்து சமூகவலைத் தளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கான சமுகவலைத் தளங்கள் கொடுப்பதே நியாயம்,” என்ற பரவலான கருத்தைச் சட்டமாக்குகிறது ஆஸ்ரேலியா. அதற்கானபடி நாட்டின் சட்டப்பிரிவுகளில் மாற்றங்கள் கொண்டுவருவது பற்றிய விவாதங்கள் பாராளுமன்றத்தில் ஆரம்பமாகும்.
செய்தி நிறுவனங்கள் தமது முதலீட்டால் சேகரித்து வெளியிடும் செய்திகளையே சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துகொள்கிறார்கள் பலர். அதனால் செய்திகள் பலரை அடைந்தாலும் அதற்கான நியாயமான விலை செய்தியைத் தயாரித்தவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்பது பல நாடுகளின், நிறுவனங்களின் கருத்தாகும்.
கூகுள், பேஸ்புக் நிறுவனங்களோ தமது தளங்களில் பகிரப்படும் விடயங்களுக்குத் தாம் விலை கொடுக்கமாட்டோம் என்று நீண்ட காலமாக வாதாடி வருகின்றன. அதை எதிர்கொள்ள உலகின் வெவ்வெறு நாடுகளிலும் வெவ்வேறு விதமான திட்டங்கள் தயாராகி வருகின்றன.
முதலாவது நாடாக பேஸ்புக், கூகுளின் நிலைப்பாட்டைத் தெளிவாக எதிர்த்து ஆஸ்ரேலியா தான் சட்டமூலமாக அவர்களை எதிர்கொள்ளத் தயார் என்றது. பதிலடியாக “நாம் கூகுளில் தேடும் வழிவகைகளை ஆஸ்ரேலியர்களுக்கு மூடிவிடுவோம்,” என்றும் “பேஸ்புக்கில் ஆஸ்ரேலியர்கள் செய்திகளைப் பகிராமல் தடுப்போம்,” என்று அந்த நிறுவனங்கள் மிரட்டின.
ஆஸ்ரேலியா மிரட்டல்களுக்குத் தளம்பாமல் தமது திட்டப்படியே சட்ட மாற்றங்களைக் கொண்டுவந்து அந்த நிறுவனத் தளங்களில் பகிரப்படும் ஒவ்வொரு செய்திக்கும் விலை போடுவோம் என்றது. ஆஸ்ரேலியாவின் நிலைப்பாட்டுக்கு ஐரோப்பா, அமெரிக்கா உட்படப் பல நாடுகளும் ஆதரவளித்து வருகின்றன.
வேறு வழியின்றி கூகுளும், பேஸ்புக்கும் தாம் நேரடியாகவே ஒவ்வொரு செய்தி நிறுவனத்துடனும் ஒப்பந்தங்கள் செய்துகொண்டு அவர்களுடன் பேரம் பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை அவரவருக்குக் கொடுக்கத் தயார் என்று இறங்கிவந்திருக்கின்றன. அப்படியே சில நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தைகளில் இறங்கி ஒப்பந்தங்கள் தயாராகின்றன.
ஆஸ்ரேலிய அரசின் நடவடிக்கையாலேயே பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் தம்மிடம் பேச்சு வார்த்தைக்கும், ஒப்பந்தத்துக்கும் தயாராக இருப்பதாகச் செய்தி நிறுவனங்களிலிருந்து நன்றி அறிக்கைகள் வெளிவருகின்றன.
.ஆஸ்ரேலியா தனது நாட்டில் கூகுள், பேஸ்புக் நிறுவனங்கள் செய்தி நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுக்கும்படி தனது சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவருவது உலகின் பல நாடுகளாலும் கவனிக்கப்படுகிறது. விரைவில் சமூக வலைத்தளங்கள் அதே போன்ற நடவடிக்கைகளை மற்றைய நாடுகளிலும் எடுக்கவேண்டியிருக்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்