மியான்மாரில் இராணுவத்தினர் சனியன்று ஊர்வலத்தினரிடையே தாக்கியதில் இருவர் மரணம்.
மியான்மார் மக்களின், நாட்டின் இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்ப்பு, மேலும் உத்வேகம் பெற்று வருகிறது. பல நகரங்களில் வெவ்வேறு துறைகளிலும் வேலை செய்பவர்களும் வீதிக்கு இறங்கித் தமது எதிர்ப்பை ஊர்வலங்களில் கோஷத்துடன் வெளியிட்டு வருகிறார்கள். இராணுவமோ தனது அடாவடித்தனங்களை அதிகரித்து வருகிறது.
அரசாங்க, தனியார் துறை ஊழியர்கள் மட்டுமன்றிக் கலைஞர்களும் மியான்மாரின் இராணுவத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள். இராணுவத்தின் எச்சரிக்கைகளைத் துச்சமாக மதித்து அவர்கள் தமது வெறுப்பைப் பகிரங்கமாகக் காட்டி வருவதாக அங்கிருந்து வெளிவரும் படங்கள், செய்திகள் வெளிப்படுத்துகின்றன. வெள்ளியன்று நடந்த ஊர்வலங்களில் இராணுவம் ஊர்வலத்தில் போகிறவர்களைச் சுட்டதில் ஒரு இளம் பெண் மரணமடைந்தார்.
அதையடுத்துச் சனியன்றும் எதிர்ப்பு ஊர்வலங்கள் மேலும் உற்சாகத்துடன் நடந்தேறின. இரண்டாவது பெரிய நகரான மண்டலாயில் ஊர்வலத்தின்போது சென்றவர்கள் பொலீசாரைக் கவணால் தாக்கினர். வாக்குவாதங்கள் இரு தரப்பிலும் எழுந்தபோது பொலீசார் கண்ணீர்ப்புகையால் தாக்கினர். அதையடுத்து துப்பாக்கிச் சூடும் ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது நடாத்தப்பட்டது. அத்தாக்குதலால் பலர் காயமடைந்து மருத்துவசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். இருவர் மரணமடைந்திருக்கிறார்கள் என்று மருத்துவசாலையிலிருந்து தெரியப்படுத்தப்பட்டது.
தமது விருப்பமின்மையை ஜனநாயக முறையில் அமைதியாகத் தெரியப்படுத்துகிறவர்கள் மீது வன்முறை பாவிக்கலாகாது என்று பக்கத்து நாடுகளும், ஐ.நா-வும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் மியான்மார் இராணுவத்தினரிடம் கோரிக்கை வைத்து வருகின்றன.
பிரிட்டன் ஒரு படி மேலே போய் மூன்று இராணுவத் தளபதிகள் மீது தடைகள் விதித்திருக்கிறது. ஊர்வலத்தில் பொலீசாரால் தாக்கப்பட்டு இறந்தவர்கள் பற்றி அறிந்தபின் மியான்மார் மீது மேலும் கட்டுப்பாடுகள் போடப்படலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்