பூட்டிவைக்கப்பட்டு ஏமாற்று வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்த இந்தியர்கள் காப்பாற்றப்பட்டனர்.

லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, மியான்மார் ஆகிய நாடுகளுக்கு தொலைத்தொடர்புத் தொழில்நுட்ப வேலைவாய்ப்புக்கள் உயர்ந்த ஊதியத்துடன் தருவதாகப்  பொய்யான உறுதிகளுடன் கொண்டுவரப்பட்டு அடிமைகளாக வேலை வாங்கப்படுகிறார்கள் என்பது பல தடவைகள் சுட்டிக் காட்டப்பட்டு வந்தது. அப்படியாக மாட்டிக்கொண்ட 130 இந்தியர்களைக் காப்பாற்றியிருப்பதாக இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சு செய்தி வெளியிட்டிருக்கிறது.

டுபாய், தாய்லாந்து மற்றும் இந்திய நகரங்களில் காரியாலயங்களைக் கொண்டிருக்கும் ஏமாற்றுக்கும்பல் சமூகவலைத்தளங்கள் மூலம் இளவயதினரை ஈர்த்து அடிமைகளாக வேலைவாங்கக் கொண்டு செல்கிறார்கள். அவர்கள் குறிப்பிட்ட நாடுகளுக்கு வந்ததும் கட்டடங்களில் பூட்டி வைக்கப்பட்டுத் தொலைபேசி, இணையத்தளம் மூலம் மற்றவர்களை ஏமாற்றி வெவ்வேறு வழிகளில் பணம் பறிக்கப் பாவிக்கப்படுகிறார்கள். மாட்டிக்கொண்டவர்கள் தப்பியோட முடியாமல் ஆயுதபாணிகளான கும்பல் காவல் செய்கிறது.

குறிப்பிட்ட இந்தியர்களில் ஒரு பாகத்தினர் மியான்மாருக்குள் விசா இல்லாமல் கொண்டுசெல்லப்பட்டு வேலை வாங்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில், ஒரு பகுதியினரை இந்திய அரசு காப்பாற்றி நாட்டுக்குக் கொண்டுவந்திருக்கிறது. மேலும் சிலர் மியான்மார் அரசின் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இதுபற்றிப் பிரதமருக்குக் கடிதமொன்றில் தெரிவித்திருக்கிறார். அவரது கடித விபரங்களின்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த 300 பேர் மியான்மாரில் மாட்டிக்கொண்டிருப்பதாகத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தியர்கள் மட்டுமன்றி தாய்லாந்து, சீனா, வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாட்டினரும் அதே போன்ற ஏமாற்றப்பட்டுச் சிறைவைக்கப்பட்டு வேலை வாங்கப்படுகிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையிடமும் இந்தப் பிரச்சினை கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மலேசிய அரசும் தனது குடிமக்கள் சிலரைக் காப்பாற்றியிருப்பதாகச் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *