“ஐ.நா-வின் மனித உரிமை பேணும் அமைப்பில் எங்கள் ஆதரவு பேரத்துக்குரியதல்ல”, என்கிறது இந்தியா.

“எங்களது நிலைப்பாடு இரண்டு தூண்களில் தொக்கி நிற்கிறது. ஒன்று சிறீலங்காவின் ஒற்றுமையையும், சுய உரிமையையும், எல்லைகளையும் மதிப்பது, இரண்டாவது ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெற்று அமைதியாக வாழ உதவுவதாக நாம் கொடுத்திருக்கும் வாக்கைக் காப்பாற்றுவது,” என்று ஐ.நா-வுக்காக இந்தியத் தூதர் இந்திரா மணி பாண்டே தெரிவித்தார். 

“எமது கோட்பாடுகளின் தூண்களிலொன்றுமே தவிக்கப்படக்கூடியதல்ல. தமிழினத்துக்கான மதிப்பைக் கொடுத்து, பயன்படக்கூடிய அதிகாரப் பகிர்வு மூலம் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை நிலைப்படுத்துவதன் மூலமே சிறீலங்காவில் ஒற்றுமையை நிலைநாட்ட முடியும் என்று நாம் நம்புகிறோம். எனவே ஈழத் தமிழர்களின் நேர்மையான கோரிக்கைகளைப் பெற்றுத்தர நாம் உதவுவதன் மூலம் சிறீலங்காவின் ஒற்றுமைக்கு உதவுவதே எங்கள் நிலைப்பாடு,” என்று இந்தியாவின் வழியைத் தெளிவு படுத்துகிறார் பாண்டே.

ஜெனிவாவில் நடந்துகொண்டிருக்கும் ஐ.நா-வின் மனித உரிமைகள் அமைப்பின் 46 கூட்டத்தில் சிறீலங்காவில் போர்க்காலத்தில் நடந்த மனித உரிமை மீறல்களில் அரசு, இராணுவம், விடுதலைப் புலிகள் ஆகியோரின் பங்களிப்பு பற்றிய விசாரணைகளுக்கான நடவடிக்கைகளைப் பற்றிய முடிவு எடுக்கப்படவிருக்கிறது. ஐக்கிய ராச்சியம், ஜேர்மனி, மலாவி, மொண்டிநீக்ரோ, வட மக்கடோனியா ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்டிருக்கும் இந்த அறிக்கைக்கான முடிவுகளை எடுப்பதுபற்றிய வாக்கெடுப்பு இன்னும் சில நாட்களில் எடுக்கப்படும்.

https://vetrinadai.com/news/michelle-bachelet-sri-lanka/

எதிர்பார்த்தது போலவே சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன முன்வைக்கப்பட்டிருக்கும் பிரேரணையை நிராகரிக்கும்படி கேட்டு அறிக்கையை எதிர்த்துப் பேசினார். போர்க்காலத்தில் நடந்தவை பற்றிய ஒரு நடுநிலையான குழுவின் விசாரணைகளைச் சிறீலங்காவின் அரசு விரும்பவில்லை. போர்க்காலத்தின் நடந்தவை தவிர்க்க முடியாதவை, அவைகளைப் பற்றி சிறீலங்காவின் அரசே விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதே சிறீலங்காவின் நிலைப்பாடாகும். 

இந்தியா தனது நிலைப்பாட்டின் அத்திவாரத்தை வெளிப்படுத்திவிட்டு அவற்றைப் பற்றிய உத்தியோகபூர்வமில்லாத பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவே விரும்புகிறது. சர்வதேச வல்லரசாகவும், ஒரு அரசியல் சக்தியாகவும் விரும்பும் இந்தியாவின் நிலைப்பாடு ஏற்கனவே ஜனநாயக ரீதியில் மனித உரிமைகளைப் பேணவிரும்பும் நாடுகளின் நிலைப்பாட்டையே பிரதிபலிக்கிறது. 

சிறீலங்கா அரசு ஈழத் தமிழர்களின் உரிமைகளையும், பிரதிநிதித்துவத்தையும் மதிக்கவேண்டுமென்று இந்தியா நீண்ட காலமாகவே குறிப்பிட்டு வருகிறது. போர்க்காலத்தின் பின்னர் இரண்டு சமூகங்களுக்குமிடையே ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டுமானால் போர்க்காலத்தின் நடந்த தவறுகளுக்கு அரசு பிராயச்சித்தம் செய்யவேண்டுமென்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது.

கடந்த பனிரெண்டு ஆண்டுகளில் சிறீலங்கா அரசுக்கு எதிராக ஐ.நா-வின் மனித உரிமைகள் பேணும் அமைப்பில் 12 முடிவுகள் எடுக்கப்பட்ட. அவைகளெல்லாவற்றிலும் இந்தியா வெவ்வேறு விதமான நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. மூன்று தடவைகள் அவை வாக்கெடுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டன. மூன்று தடவைகள் இந்தியா ஆதரவாக வாக்களித்து, ஒரு தடவை வாக்களிக்காமல் தவிர்த்தது. 

மாநாட்டில் பங்குபற்றும் நாடுகளுக்குள் வரவிருக்கும் வாரத்தில் ஆரம்பமாகவிருக்கும் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னரே இந்தியாவின் முடிவு தெளிவாக்கப்படும். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *