சிரிய அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற டென்மார்க் முடிவு.
டென்மார்க் அரசு அங்கு தங்கி உள்ள சிரிய நாட்டு அகதிகளை அவர்களது தாயகத்துக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
போருக்குப் பின்னர் சிரியத் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இயல்பு வாழ்வுக்கு ஏற்ற சூழ்நிலை திரும்பி உள்ளது என்று தெரிவித்தே அகதிகள் அங்கு திரும்பிச் செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
டென்மார்க்கில் தஞ்சமடைந்திருந்த 94 சிரியப் பிரஜைகளது வதிவிட அனுமதி மீளப்பெறப்பட்டுள்ளது. இவ்வாறு சிரிய அகதிகளது வதிவிட உரிமையைப் பறித்து அவர்களைத் திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ள முதலாவது ஐரோப்பிய நாடு டென்மார்க் ஆகும்.
அகதிகள் அனைவரும் நாடுகடத்த லுக்கான இடைத் தங்கல் நிலையத் துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். எனினும் அவர்கள் தாங்களாகவே தாயகம் திரும்புமாறு கேட்கப்படுவர் என்றும் எவரும் டென்மார்க்கில் இருந்து வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
“.. தேவையானவர்களுக்கு அவசியமான தருணத்தில் டென்மார்க் தஞ்சம் வழங்கும். காலப்போக்கில் அவர்களது சொந்த நாடுகளில் இயல்பு நிலை திரும்பும் போது முன்னாள் அகதி ஒருவர் அங்கு மீளத் திரும்பி புதிய வாழ்வைத் தொடங்குவது கட்டாயம்..” – என்று குடியேற்ற விவகார அமைச்சர் Mattias Tesfaye ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித் திருக்கிறார்.
மிகக் கடுமையான தஞ்சக் கொள்கை மூலம் புகலிடக் கோரிக்கையாளர்கள் என்று எவரையும் அனுமதிக்காத நாடாக டென்மார்க்கை மாற்றுவதே தனது இலக்கு என்று பிரதமர் மெற் பிரெட்றிக்சென் (Mette Frederiksen) அம்மையார் அண்மையில் தெரிவித் திருந்தார். அவரது அந்த நிலைப்பாட்டை மனித உரிமை அமைப்புகள் கண்டித் துள்ளன.
குமாரதாஸன். பாரிஸ்.