உலக மக்களெல்லோரும் ஒன்றிணைந்து வருடாவருடம் குப்பையாக்கும் உணவு சுமார் ஒரு பில்லியன் தொன்களாகும்.
முதல் தடவையாக அடிப்படை தானியத் தயாரிப்பு முதல், சாப்பிடும் உணவு வரையுள்ள சங்கிலித் தொடர்பை ஆராய்ந்த ஐ.நா-வின் சுற்றுப்புற சூழல் பேணும் அமைப்பே இந்த விபரத்தை வெளியிட்டிருக்கிறது. ஒரு பில்லியன் தொன் என்பது உலகின் மொத்த உணவுத் தயாரிப்பின் பதினேழு விகிதமாகும்.
சுபீட்சமடைந்த நாடுகள், நடுத்தர பொருளாதார நாடுகள், வறிய நாடுகள் உட்பட 54 உலக நாடுகளின் வெவ்வேறு மட்டத்திலும் கவனிக்கப்பட்டு, புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்பட்டே இந்த ஆராய்வு நடாத்தப்பட்டிருக்கிறது. அந்த நாடுகளின் மக்கள் தொகை உலகின் சுமார் 75 விகிதமானதாகும். சாதாரணமாக உணவுத் தயாரிப்பின் வெவ்வேறு மட்டங்களில் நடத்தப்படும் இதுபோன்ற ஆராய்ச்சியை விட இது வித்தியாசமானதாகும். ஏனெனில், இது உணவை உண்பவர்களின் நடவடிக்கைகளையும் கவனித்தே செய்யப்பட்டிருக்கிறது. அதன் மூலம் சாதாரண மனிதர்கள் தமது அன்றாட வாழ்வில் எவ்வளவு உணவை நாசமாக்கி எறிகிறார்கள் என்பதும் வெளியாகிறது.
தலைக்கு 121 கிலோ உணவு ஒருவருக்காக சேதமாகிறது எனில் அதில் சுமார் 74 கிலோ உணவு வீடுகளில் எங்களது உணவு சம்பந்தப்பட்ட கையாளலால் சேதமாக்கப்படுகிறது. குப்பையாக்கப்படும் உணவையெல்லாம் 40 கிலோ பாரவண்டிகளில் நிறைத்து, அப்பாரவண்டிகளை நெருக்கமாக நிறுத்தினால் அவை ஏழு தடவைகள் உலகைச் சுற்றி நிறுத்தக்கூடியதாக இருக்கும்.
அதே சமயத்தில் உலகின் 700 மில்லியன் மக்கள் ஒவ்வொரு இரவும் உண்ணும் வசதியின்றிப் படுக்கைக்குப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. “இதுவரை உணவைக் குப்பையாக்குவது ஒரு பணக்கார நாடுகளின் பிரச்சினையாகக் கணிக்கப்பட்டது. ஆனால், ஒவ்வொரு நாட்டிலும் இப்பிரச்சினை இருக்கிறது வெவ்வேறு அளவில் என்பது இந்த ஆராய்ச்சி மூலம் தெளிவாகிறது,” என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியைச் செய்தவர்கள்.
உணவை எறிந்து குப்பையாக்குதல் மனிதர்களின் உணவுப் பிரச்சினை மட்டுமல்ல ஒரு சுற்றுப்புற சூழல் மாசுபடுத்தல் பிரச்சினையும் கூட. குப்பையாகும் உணவு சூழலை மாசுபடுத்தாமல் செய்ய அவற்றை மீண்டும் எரிசக்தியாக்கலாம் இல்லையேல் அது சூழலை அசுத்தமாக்குகிறது. அத்துடன் மொத்த உணவுத் தயாரிப்பின் சுமார் ஐந்திலொரு பங்கு வீணாகிறது எனும்போது அதற்காகப் பாவிக்கப்படும் நிலம், இரசாயணம், முதலீடுகள், உழைப்பு, சக்தி ஆகியவை அனைத்துமே வீணடிக்கப்படுகின்றது.
சாள்ஸ் ஜெ. போமன்