பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் நிறவாதம் கொண்டவர்கள் என்கிறார்கள் ஹரியும் மேகனும்.
உலகமெங்கும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட ஒபரா வின்பிரி, ஹரியையும் மேகனையும் செவ்வி காணும் நிகழ்ச்சியில் வெளியாகியிருக்கும் விடயங்கள் இவ்வார ஆரம்பத்தில் நெருப்புக் கணைகளாக பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மீது விழுந்திருக்கின்றன. மேகனுக்கு ஏற்பட்ட மன உழைச்சலை உதாசீனம் செய்தது, தம்பதிகளின் பிள்ளைகளின் தோல் நிறம் பற்றிய விமர்சனங்கள் ஆகியவை அவற்றுள் முக்கியமானவை.
“நான் தொடர்ந்தும் வாழவிரும்பவில்லை என்பது எனது இடைவிடாத எண்ணமாக எனக்குள் எழுந்துகொண்டிருந்தது. எனக்கு அவைகளிலிருந்து விடுபட உதவி தேவையாக இருந்தது.அதற்கான உதவியை நாடியபோது அரச குடும்பத்திலிருந்து எனக்கு உதவி கிடைக்கவில்லை,” என்று சார்ள்ஸ் டயானா தம்பதிகளின் இரண்டாவது மகனின் மனைவி மேகன் மெர்க்கல தொலைக்காட்சியில் வெளிப்படுத்தினார்.
ஹரியின் பெற்றோர் பிரிந்து சென்றபின் தாயார் டயானா தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுக்கப்போகிறார் என்ற போதிருந்த எதிர்பார்ப்பைவிட அதிகமாக இருந்தது ஹரியும் மேகனும் பிரசித்திபெற்ற அமெரிக்க செவ்விகாணும் நட்சத்திரம் ஒபரா வின்பிரேயின் நிகழ்ச்சியில் பங்குபற்றப் போகிறார்கள் என்ற செய்தி. இந்த நிகழ்ச்சிக்காக தொலைக்காட்சி நிறுவனத்தினரிடமிருந்து வின்பிரே பெற்றுக்கொண்ட தொகை ஒன்பது மில்லியன் டொலர்கள் என்பதும் பெரிதாகப் பேசப்பட்டது.
பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரின் உத்தியோகபூர்வமான அங்கத்துவராகப் பங்கெடுக்க நேர்ந்ததால் உண்டாகிய நிலையே தனது மன அழுத்தத்துக்கும் அதனால் ஏற்பட்ட தற்கொலை எண்ணங்களுக்கும் காரணமென்கிறார் மேகம். அரச குடும்பத்தினரிடையே சக அங்கத்தினரைப் புரிந்துகொள்ளும் பரந்த மனமோ, ஆர்வமோ இல்லையென்றும் அவர்கள் உத்தியோகபூர்வமான கடமைகளை நிறைவேற்றுவதிலேயே கண்ணுங்கருத்துமாயிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
டோரியா ராக்லாண்ட் என்ற அமெரிக்கக் கறுப்பினப் பெண்ணின் மகள்தான் மெர்கன் மெர்க்கல. அதைப் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் மேகன் தனது தாயாரை மிகவும் போற்றி வருபவர். டோரியா ஒரு சமூக சேவையாளரும், யோகா கற்பிக்கும் ஆசிரியையுமாகும்.
மேகனின் குடும்பத்தினரின் பின்னணியைச் சுட்டிக்காட்டி தம்பதிகளுக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் தோலின் நிறம் எப்படியிருக்கும், அதனால் பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரின் அந்தஸ்து எப்படிப் பாதிக்கப்படும் போன்ற கருத்துக்களையும் தான் நேரடியாக எதிர்நோக்கியதாக மேகன் குறிப்பிட்டார். மேகன் கர்ப்பிணியாக இருக்கும்போதே அக்குழந்தை அரச குடும்பத்தின் பதவிப் பெயர்கள் எதையும் பெறமுடியாது என்பதும், அவர்கள் அரச குடும்பத்தினரின் பாதுகாப்பு அமைப்புக்களிலும் பங்குபெற இயலாது என்றும் குறிப்பிடப்பட்டது.
அதே சந்தர்ப்பத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அங்கத்தவர் ஹரியுடனான சம்பாஷணையில் அவர்களது பிள்ளையின் நிறம், அதனால் அரசகுடும்பத்துக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதை ஹரி ஊர்ஜிதம் செய்தார்.
ஜனவரி 2020 இல் தாம் அரச குடும்பத்தின் உத்தியோகபூர்வமான அங்கத்தவர்கள் என்ற இடத்தை விட்டு விலகக் காரணங்களிலொன்றாக பிரிட்டிஷ் பத்திரிகைகளின் தாங்கமுடியாத தொல்லையும், அவமதிப்பும் என்று மேகன் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரின் ஆதரவாளர்களும், பிரிட்டிஷ் பத்திரிகைகளும் ஓபரா வின்பிரே செவ்வி வெளிவர முதலேயே ஹரி- மேகன் தம்பதியினர் பகிரங்கமாக பிரிட்டிஷ் அரச குடும்பம் பற்றிப் பேசப்போவது பற்றி வெகுண்டெழுந்திருந்தனர். “அவர்களுக்கு அரச குடும்ப அங்கத்தவராக இருக்கும்போது கிடைக்கும் நட்சத்திர அந்தஸ்து வேண்டாமென்றுதான் அதிலிருந்து விலகினார்கள். பின்பு எதற்காக இப்படியான கவன ஈர்ப்பில் ஈடுபடுகிறார்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அத்துடன் சாள்ஸின் தந்தையார் பிலிப் உடல் நலமின்றிப் பல நாட்களாக மருத்துவ மனையிலிருக்கும்போது இந்த நேர்காணல் வெளியிடப்படுவது பற்றியும் ஹரி – மேகன் தம்பதிகள் விமர்சிக்கப்பட்டார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்