கொரோனாத் தொற்றுக்கள் ஏற்படுத்திய பக்கவிளைவாக கடலில் சரக்குகள் போக்குவரத்து விலைகள் அதிகரித்திருக்கின்றன.
உலகின் பல நாடுகளும் தமது பொதுமுடக்கங்களை மெதுவாக நீக்கிவரும் சமயம் பெருந்தொற்றுக்கு முன்னைய காலம் போலச் சரக்குகளைக் கடல் போக்குவரத்து மூலம் சகல திசைகளிலும் அனுப்புவது மீண்டும் ஆரம்பமாகியிருக்கிறது. ஆனால், வெவ்வேறு காரணங்களினால் கப்பல்களில் பொருட்களைக் கொண்டுசெல்லும் கொள்கலன்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது.
உலக நாடுகளின் ஏற்றுமதி – இறக்குமதிப் பொருட்கள் 90 விகிதம் கடல் போக்குவரத்து மூலமே அனுப்பப்படுகின்றன. சரக்குக் கப்பல்களில் அனுப்பப்படும் வெவ்வேறு பொருட்களுக்கு ஏற்ப அவைகளின் கொள்கலன்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். அப்படியான கொள்கலன்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் சரக்குகளைக் கொண்டு செல்வதற்கான விலைகள் ஐந்து மடங்கு அதிகரித்திருக்கின்றன.
தொற்றுக்களைத் தடுப்பதற்காகச் சீனா தனது தொழிற்சாலைகளைப் பூட்டி வைத்திருந்தது. அவைகள் இப்போது படு வேகமாகச் செயற்படத் தொடங்கிவிட்டன. எனவே, சீனாவின் கிழக்குக்கரைத் துறைமுகங்களில் மிகவும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம் உலகின் மிகப் பெரும் துறைமுகமான லாஸ் ஏஞ்சல்ஸ் லோங் பீச் துறைமுகத் தொழிலாளர்களில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் துறைமுகத்தில் வேலைகள் மிகக்குறைந்த வேகத்தில் நடக்கின்றன.
நிலைமை பல நாட்களாகத் தொடர்வதால் முப்பதுக்கும் அதிகமான கப்பல்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்தில் தங்கள் பொருட்களை இறக்குவதற்காகத் துறைமுகத்துக்கு வெளியே காத்திருக்கின்றன. அதே சமயம் துறைமுகத்தில் இறக்கப்பட்ட கொள்கலன்களிருக்கும் பொருட்கள் வெளியே எடுக்கப்படும் காலத்திலும் நேரத் தொய்வு ஏற்பட்டிருக்கின்றது.
கொள்கலன்களை இறக்கிவிட்டுக் கடலில் காத்திருக்கும் காலத்தில் காலம் அதிகமாவதால் கப்பலின் உரிமையாளர்கள் வேகமாகச் சீனாவுக்குக் கப்பலைக் கொள்கலன்கள் இல்லாமலேயே திரும்பச் சொல்லிவிடுவதால் பல துறைமுகங்களிலும் கொள்கலங்கள் தேங்கிக்கிடக்க ஆரம்பிக்கின்றன என்றும் குறிப்பிடப்படுகின்றது.
மொத்தத்தில் சர்வதேசப் பொருட்கள் போக்குவரத்தில் பெருந்தொற்று ஏற்படுத்திய ஒழுங்கீனம் பல மட்டங்களில் நிலைமையை மோசமாக்கிவிட்டதாலேயே சரக்குகளைக் கொண்டுசெல்வதற்கான விலைகள் அதிகமாகியிருக்கின்றன. சாதாரண சமயத்தில் விலைகள் இறங்கிவரும் அவ்விலைகள் இப்படியான நிலையைச் சந்திருப்பது சரித்திரத்திலேயே முதல் தடவை என்று வர்த்தக நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.
இதன் விளைவு விரைவில் கொள்வனவு செய்பவர்கள் மேலேயே விழும் என்று எச்சரிக்கப்படுகின்றது. பொதுவாக விலைகள் சர்வதேச ரீதியில் இதனால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலைமை சீராக மேலும் அரையாண்டு ஆகலாம் என்று கணிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்