1950 க்குப் பின்னர் பிரெஞ்ச் தேவாலயத்தினுள்ளே நடந்த பாலர் பாலியல் குற்றங்கள் 10,000 அதிகமானவை.
சமீப வருடங்களில் அமெரிக்கா, ஆஸ்ரேலியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் கிறீஸ்தவ திருச்சபைகளுக்குள்ளே நடந்த பாலியல் குற்றங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுவாகவே திருச்சபையின் உயர்மட்ட பேராயர்களால் இருட்டடிக்கப்பட்ட அப்படியான சம்பவங்களில் ஈடுபட்டவர்களையும், மறைத்தவர்களையும் வெளிப்படுத்தும் ஆராய்வுகள் நடந்து வருகின்றன.
பிரான்ஸ் அரசினாலும் அந்த நாட்டின் கத்தோலிக்கத் திருச்சபைக்குள் நடந்த பாலியல் குற்றங்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த ஒரு நடுநிலையான குழு நியமிக்கப்பட்டிருந்தது. அக்குழுவின் தலைவர் Jean-Marc Sauve வெளியிட்ட அறிக்கையின்படி 1950 க்குப் பின்னர் 10,000 மேலான பாலர்கள் திருச்சபைக்குள் இருந்த குருமார் மற்றும் பணியாளர்களா பாலியல் இச்சைக்குப் பாவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் தங்களது விபரங்களைத் தெரிவிப்பதற்காக 2019 இல் பிரான்ஸில் ஒரு தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டது. முதல் பதினேழு மாதங்களில் மட்டும் சுமார் 6,500 பேர் அந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டதாக ஆராய்வுக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
அந்த ஆராய்வுக் குழுவில் சட்ட வல்லுனர்கள், மருத்துவ வல்லுனர்கள், கல்விச் சேவைகளில் இருப்பவர்கள் மொத்தமாக 20 பேர் இருக்கிறார்கள். கடந்த வருட இறுதியில் அக்குழு தனது விபரங்களை வைத்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று கொடுக்கப்பட்டிருந்த எல்லை தற்போது இவ்வருடம் செப்டெம்பர் மாதம் வரை நீட்டப்பட்டிருக்கிறது.
திருச்சபைக்குள் நடந்த குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை வெளிப்படுத்தியவர்கள் 5 விகிதமா அல்லது 25 விகிதமா என்று தெரியவில்லை என்று Jean-Marc Sauve இதுவரை வெளிவந்த விபரங்களைப் பற்றிப் பேசுகையில் குறிப்பிட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்