ஆப்கானிஸ்தானில் பாடசாலைச் சிறுமிகள் பாடுவதற்கான தடை நீக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் பாடசாலைகளில் படிக்கும் சிறுமிகள் குழுக்களாகப் பாடுவது வழக்கமாக நடந்து வரும் ஒரு விடயமாகும். கடந்த வாரம் நாட்டின் கல்வியமைச்சு அதற்குத் தடை விதித்தது. அத்தடையானது பலரின் எதிர்ப்புக்களால் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த புதனன்று ஆப்கானியக் கல்வியமைச்சு வெளியிட்ட அறிக்கையானது நாட்டின் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் ஆண்கள் பார்வையாளர்களாக இருக்கும் பொது நிகழ்ச்சிகளில் பாடுவதைத் தடை செய்தது. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள், பெண்களால் பாடுவதற்குப் பழக்கப்படலாம், அவர்கள் பெண்களுடன் மட்டுமே பாடலாம் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது. அந்தக் கட்டுப்பாட்டை மீறும் பாடசாலை அதிபர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிக்கை எச்சரித்திருந்தது.
கல்வியமைச்சின் அந்த அறிக்கை ஆப்கானிஸ்தானின் சமூகத்தினரிடையே பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்தது. நாட்டின் பல பெண்கள் தாமே பாடிச் சமூகவலைத் தளங்களில் பதிந்தார்கள். பலர் “எங்கள் சிறுமிகள் பாடுவதைத் தடை செய்யக்கூடாது,” என்று பகிரங்கமாகக் குரல் கொடுத்தார்கள்.
சர்வதேச அரங்கிலும் ஆப்கானிஸ்தானின் கல்வி அமைச்சின் முடிவானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கத்தாரில் இழுபட்டுவரும் அமைதிப் பேச்சுவார்த்தை, நாட்டில் முடுக்கி விடப்பட்டிருக்கும் பெண்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறை, விரைவில் ஆப்கானிலிருந்து வெளியேறப்போவதாக எதிர்பார்க்கப்படும் அமெரிக்க இராணுவம் ஆகியவையெல்லாம் சேர்ந்து ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் கால நிலைமையைக் கொண்டுவருகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
பல திசைகளிலுமிருந்து எழுந்த எதிர்ப்புக்களைத் தாங்க முடியாமலோ என்னவோ, ஞாயிறன்று இரவு ஆப்கானிஸ்தானின் கல்வியமைச்சு தான் அறிவித்திருந்த “12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பொது நிகழ்ச்சிகளில் பாடத் தடை,” என்ற அறிவிப்பை ரத்து செய்ததாக அறிவித்தது. ஆனாலும், அதே ரத்து அறிவிப்பில் “அந்த ரத்தானது அமைச்சின் நிலைப்பாட்டையோ, கோட்பாடுகளையே வெளிப்படுத்தவில்லை,” என்று குறிப்பிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்