ஜப்பான் ஒலிம்பிக்ஸ் விழாவை நிர்வகிக்கும் மேலுமொருவர் மற்றவரைக் கேவலமாகப் பேசியதற்காகப் பதவியிறங்குகிறார்.
நவோமி வத்தனபே என்ற பிரபல நகைச்சுவை நடிகையை அவமதிப்பாகப் பேசியதனால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாகப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் ஒலிம்பிக்ஸ் விழாவின் நிகழ்ச்சிப் படைப்புகள் நிர்வாகி ஹிரோஷி சசாகி.
உடல் பருமனுள்ள நடிகை நவோமி வத்தனபே ஒரு ஒலிம்பிக்ஸ் பன்றியாக [“Olympig” ]விழாவில் தோன்றலாமென்று சசாகி இழிவாகப் பேசியதாக சஞ்சிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதை அவர் ஒரு குழுவில் சம்பாஷிக்கும்போது பேசியதாகவும் அதை மற்றவர்கள் அப்போதே சுட்டிக்காட்டிக் கண்டித்ததாகவும் தெரியவருகிறது.
ஒலிம்பிக்ஸ் விழாக்களை, முக்கியமாக பாரா ஒலிம்பிக்ஸ் நடத்துவதில் மிகவும் முக்கிய பொறுப்பில் இருப்பவர் சசாகி. “எனது நடத்தைக்காக நான் மிகவும் வருந்துகிறேன். அதனால், பாதிக்கப்பட்டவரிடம் பணிவுடன் மன்னிப்புக் கேட்கிறேன்,” என்று சசாகி தனது செய்தியில் தெரிவித்திருக்கிறார்.
கொரோனாத் தொற்றுக்களால் ஒத்திப்போடப்பட்டு, ஜப்பானியர்களின் அதிருப்தியைச் சம்பாதித்துக்கொண்டு நடாத்தப்படும் ஒலிம்பிக்ஸ் போட்டி மீண்டும், மீண்டும் பல பிரச்சினைகளால் நடக்குமா என்ற கேள்விக்குறியுடன் இருக்கும்போது இது புதியதொரு அவப்பெயரைச் சம்பாதித்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் பெண்களைப் பற்றி அவமதிப்பாகக் குறிப்பிட்ட ஒலிம்பிக் ஸ் தலைவர் யொஷிரோ மோரி பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்