பெண்களுக்கெதிரான வன்முறையைத் தடுக்க ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையிலிருந்து துருக்கி விலகியது.
சர்வதேச ரீதியில் பெண்களுக்கெதிரான வன்முறையையும், குடும்பங்களுக்குள் பெண்களுக்கெதிரான வன்முறையையும் தடுக்க ஒன்றுபட்டடு 2011 இல் 45 உலக நாடுகள் இஸ்தான்புல்லில் சந்தித்து ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கைச்சாத்திட்டன. துருக்கியின் ஜனாதிபதி அந்த உடன்படிக்கையிலிருந்து விலகியதாக வெள்ளியன்று கைச்சாத்திட்டிருப்பதாகத் துருக்கிய அரசு அறிவித்திருக்கிறது.
பொதுவாக சகல வன்முறைகளும் மனித உரிமைகளுக்கு எதிரானவை என்றே கணிக்கப்படுகின்றன. ஆனாலும், பல நாடுகள், கலாச்சாரங்கள் பெண்களுக்கெதிரான வன்முறைகளை நியாயப்படுத்துகின்றன. எனவே, சமூகத்தில் பொதுவாகவும், வீட்டுக்குள், உறவுகளுக்குள் பெண்களை வன்முறைக்கு உட்படுத்துவது குற்றமாகக் கருதப்படுவதில்லை. அந்த நிலைமையை மாற்றவே பெண்களுக்கெதிரான வன்முறைகள் என்னவென்பதை வரையறுத்து, அவைகளை முற்றாக ஒழித்துக்கட்ட எப்படியான நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென்பதைத் தெளிவுபடுத்தி, ஏற்கொண்ட நாடுகள் “இஸ்தான்புல் உடன்படிக்கையில்” கைச்சாத்திட்டன.
அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னரே துருக்கியின் குடியியல் சட்டத்தில் 6284 வரி சேர்க்கப்பட்டது. அதன் மூலம் துருக்கியப் பெண்கள் தாம் குடும்பத்துக்குள், வீட்டுக்குள் வன்முறைக்கு உள்ளாகும் பட்சத்தில் அதற்கெதிராக பொலீசை நாடலாம்.
குறிப்பிட்ட அந்த வரிகளின் விளைவால் துருக்கியில் பெண்கள் தங்கள் உரிமையைச் சுட்டிக்காட்டி வழக்குகள் மூலம் விவாகரத்துக்கள் அதிகமாவதாக துருக்கியின் ஆளும் கட்சியினரும், அதன் கூட்டுக் கட்சியான பழமைவாதக் கட்சியும் குற்றஞ்சாட்டி வந்தன. அதன் விளைவாக ஜனாதிபதி எர்டகான் தற்போது அந்த உடன்படிக்கையிலிருந்து விலகியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்