பல வாரங்களாக எதிர்பார்க்கப்பட்ட ஐஸ்லாந்தின் எரிமலையொன்று வெள்ளியன்று வெடித்திருக்கிறது.

கடந்த சில வாரங்களாகவே ஐஸ்லாந்து பல்லாயிரக்கணக்கான சிறு, சிறு பூமியதிர்ச்சிகளை அனுபவித்துவந்தது. அதற்குக் காரணமாக இருந்த எரிமலைவெடிப்பு ரெய்க்கானேஸ் தீபகற்பத்தில் வெள்ளியன்று ஆரம்பித்திருக்கிறது. இந்த எரிமலை நாட்டின் தலைநகரான ரெய்க்காவிக்குக்கு அண்மையிலேயே இருக்கிறது. ஐஸ்லாந்தின் சர்வதேச விமான நிலையமும் வெடித்திருக்கும் எரிமலையிலிருந்து அதிக தூரத்திலில்லை.  

உலகிலேயே மிக அதிகமான அளவில் எரிமலைகள் செயற்பாட்டிலிருக்கும் புவியியலைக் கொண்டது ஐஸ்லாந்து. 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் எயாபியல்லாயொகுல் [Eyjafjallajökull] எரிமலை வெடித்துப் பல மைல்கள் உயரத்துக்குத் தனது குழம்பையும், எரிமலை வாயுக்களையும் உமிழ்ந்தது. அதன் மூலமாக ஐஸ்லாந்தையொட்டிய பாகங்களில் பல நாட்கள் விமானப் போக்குவரத்து நிறுத்தப்படவேண்டியதாயிற்று. 

வெடித்திருக்கும் எரிமலை நாட்டின் மிகவும் அதிகமான மக்கள் வாழும் பகுதியை அடுத்திருக்கிறது. ஆயினும், தற்போதைய நிலைமையில் அதன் செயற்பாடு மந்தமாகவே இருப்பதால் பொதுமக்களுக்குப் பாதிப்புக்களெதையும் ஏற்படுத்தாது என்று குறிப்பிடப்படுகிறது. ஆயினும், ஒரு சாரார் அப்பகுதியிலிருந்து வேறு ஊர்களை நோக்கிப் பயணிக்கிறார்கள்.

தற்போதைய நிலைமையில் போக்குவரத்துகளும் வழக்கம்போல நடக்கின்றன. விமானப் போக்குவரத்து வெள்ளியிரவு நிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. எரிமலை வெடிக்கும்போது வெளிவரும் கந்தகம் போன்ற நச்சு வாயுக்கள் வெளியேறிக்கொண்டிருக்கின்றன. அவை, அப்பிராந்தியத்தின் சுவாசிக்கும் காற்றில் பரவினாலே மக்களுக்கு ஆபத்து ஏற்படலாம். இப்போது மக்கள் முடிந்தவரை வீடுகளுக்கு வெளியே திரியவேண்டாம் என்று வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். 

ஆகக்குறைந்தது ஐந்து வருடங்களுக்கொருமுறையாவது ஐஸ்லாந்தில் ஏதாவது ஒரு எரிமலை வெடிப்பு ஏற்படுவது வழக்கம். இப்போது வெடித்திருக்கும் எரிமலையானது 12 ம் நூற்றாண்டுக்குப் பின்னர் இதுவரை உயிர்த்தெழவில்லை. அச்சமயத்தில் ஒரு தடவை வெடித்த அந்த எரிமலை தொடர்ந்து 30 வருடங்களாகத் தனது செயற்பாட்டிலிருந்து குழம்பைக் கக்கிக்கொண்டிருந்தது என்கிறார்கள் புவியியல் ஆராய்வாளர்கள். 

தற்போதைய எரிமலைவெடிப்பு எத்தனை காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை. மந்தமான செயற்பாடே இருந்து வருவதால் ஒரு நீண்டகாலத்துக்கு அது தொடர்ந்துகொண்டிருக்கலாமென்றும் அஞ்சப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *