மனித உரிமைகள் மீறல்கள் மட்டுமன்றிக் கத்தாரின் மிருகவதைகளும் வெளிச்சத்துக்குள் வருகின்றன.
இன்னும் ஒன்றரை வருடத்தில் கால்பந்தாட்டத்துக்கான உலகக் கோப்பைக்கான பந்தயங்களை நடத்தவிருக்கும் கத்தாரின் மீது சகல பாகங்களிலிருந்தும் கவனிப்புக்கள் அதிகரிக்கின்றன. கொரோனாக் கட்டுப்பாடுகளிலிருந்து மெதுவாக வெளியேறும் கத்தாரில் மிருகங்கள் கைவிடப்பட்டு வீதிகளில் எறியப்படுவது அதிகரித்திருப்பதாக மிருக உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அங்கங்கள் வெட்டப்பட்ட, எரிக்கப்பட்ட, கொலை முயற்சிகளுக்கு உட்படுத்தப்பட்ட நாய்கள், பூனைகளை வீதிகளில் மிருகங்களைக் காப்பாற்றுபவர்கள் கவனிக்கிறார்கள். கத்தாரில் தொழில்வாய்ப்புப் பெற்று வேலை செய்துவிட்டு ஒப்பந்தம் முடிந்து திரும்பிப் போகும் வெளிநாட்டினர்கள் இதை வழக்கமாகச் செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது.
கத்தாரில் 2004 இல் கொண்டுவரப்பட்ட சட்டமொன்று மிருகவதை செய்வதைத் தண்டனைக்குரிய குற்றமாக்கியிருக்கிறது.
2022 உலகப் பந்தயங்களுக்கான பல திட்டங்களில் வேலை செய்ய வருபவர்கள் கத்தாரை விட்டுப் போகும்போது மிருகங்கள் மேலும் அதிகமாக வீதிகளில் வீசப்படும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்படுகிறது. வீதிகளில் நாய்களைக் கண்டால் சுடுபவர்கள், கத்தியால் குத்துபவர்களும் உண்டு. காரணம் இஸ்லாம் நாயை ஒரு அசுத்தமான மிருகமாகக் குறிப்பிடுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்