விவசாய அபிவிருத்தி நோக்கத்துக்காக ருவாண்டாவில் 3,000 பெண்களுக்குக் கைத்தொலைபேசி வழங்கப்பட்டது.
ருவாண்டா அரசு தனது நாட்டிலிருக்கும் விவசாயிகளுக்கிடையே நிலவும் தகவல் குறைபாடுகளை நிரப்பும் நோக்கத்தில் ConnectRwanda initiative என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அவர்களுக்குத் தொலைத்தொடர்புகளால் வலைபின்னிக் கொடுத்து வருகிறது. அதற்காகவே விவசாயத்தில் ஈடுபடும் வெவ்வேறு பிராந்தியத்தைச் சேர்ந்த 3,000 பெண்ண்களுக்கு இலவசமாகப் புத்திசாலித் தொலைபேசிகளைக் கொடுத்திருக்கிறது.
ருவாண்டாவின் விவசாயிகளில் 60 % பெண்களாகும். எனவே அவர்களிடையே தகவல் பரப்புபவர்கள் என்ற இணைப்பாளர்களை உண்டாக்கியிருக்கிறது. ஒவ்வொரு தகவல் பரப்பும் இணைப்பாளர்களும் தம் பங்குக்கு சுமார் 4,000 விவசாயிகளுடன் தொடர்பிலிருக்கிறார்கள். நாடெங்கும் பரவலாக டிஜிடல் தொடர்புகளும், அதற்கான வசதியுள்ளவர்களும் இல்லாததால் இணைப்பாளர்கள் விவசாயம் தொடர்பான விபரங்களை அமைச்சின் தகவல்கள் மூலம் தெரிந்துகொண்டு சக விவசாயிகளுக்கும் அதைக் கொண்டு செல்லவேண்டுமென்பதே ருவாண்டா அரசின் நோக்கமாகும்.
காலநிலை, பயிர்களின் விளைச்சல், தானிய விதைகள், உரங்கள், மற்றும் விவசாயிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களைப் பரப்புவதற்கு டிஜிடல் தொழில்நுட்பத்தையும், பெண்களுக்கு விவசாயத்திலிருக்கும் முக்கியத்துவத்தையும் பாவிப்பதே தமது நோக்கமென்று இத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் விவசாய அமைச்சு தெரிவிக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்