சிறீலங்காவின் மேற்குப் பாகத்திலிருக்கும் வெண்மணலிலான கடற்கரைகள் எரிந்த கொள்கலன் கப்பலொன்றினால் கறுப்பாகி வருகின்றன.
இந்தியாவிலிருந்து எரிநெய், டீசல் மற்றும் நைட்ரஜன் போன்ற ஆபத்தான இரசாயணப் பொருட்களைச் சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லப் புறப்பட்ட கப்பலொன்று கொழும்புக்கு வெளியே தீப்பிடித்து எரிந்து வருகிறது. கொள்கலன்களிலிருந்த இரசாயணங்களால் ஏற்பட்ட விபத்தால் ஒரு வாரத்துக்கும் மேலாக எரிந்துகொண்டிருக்கும் அக்கப்பலிலிருந்து தொன் கணக்கிலான நச்சு அழுக்குகள் சிறீலங்காவின் மேற்கிலிருக்கும் கடற்கரைப் பகுதிகளில் ஒதுங்கிக்கொண்டிருக்கின்றன.
நிலைமையின் ஆபத்தைக் கணித்து அக்கப்பலை மும்பாயின் வடக்கேயிருக்கும் ஹசீரா/சூரத் துறைமுகம் அல்லது கத்தாரின் ஹமாத் துறைமுகத்துக்குக் கொண்டு செல்ல அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது. இந்தியாவும், கத்தாரும் அதற்கான அனுமதியை மறுத்துவிட்டன. கப்பல் சிறீலங்காவை நோக்கிச் சென்றது அங்கும் அதற்கான அனுமதி பெறப்படவில்லை.
X-Press Pearl என்ற அந்தச் சிங்கப்பூர் கப்பலில் 1,486 கொள்கலன்களில் ஆபத்தான எரியக்கூடிய திரவங்கள் கொண்டு செல்லப்பட்டன. அவைகளில் அமிலங்களும் அடக்கம். அமிலங்கள் அடங்கிய கொள்கலன்கள் சிலவற்றில் ஓட்டைகளிருந்து அவை கசிய ஆரம்பித்ததை சிறீலங்காவுக்கு வரமுதல் பல நூறு மைல்கள் தொலைவிலேயே கப்பலின் தலைமை மாலுமி கண்டிருக்கிறார்.
கொழும்புத் துறைமுகத்துக்கு வெளியே கப்பலிலிருந்த கசியும் அமிலங்கள், மற்றைய எரிபொருட்களுடன் தொடர்பு கொண்டதாலோ என்னவோ தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. உடனடியாக இந்திய, சிறீலங்கா கடற்படையினரின் உதவியுடன் கப்பலிலிருந்த மாலுமிகள் சிறீலங்காவுக்குக் காப்பாற்றிக் கொண்டு செல்லப்பட்டனர். [ஐந்து இந்திய மாலுமிகளில் இருவருக்குக் கொரோனாத் தொற்று இருப்பதாக சிறீலங்காவில் தெரிந்துகொள்ளப்பட்டது.
எரிபொருட்கள், அமிலங்கள், இரசாயணத் திரவங்கள் கொழும்பைச் சுற்றியிருக்கும் கடலில், கசிந்துகொண்டிருக்கிறது. அத்துடன் சுமார் 500 க்கும் குறையாத கொள்கலங்கள் மற்றும் கப்பலின் எரிந்த பாகங்களும் கடலில் மிதந்து சென்று சிறீலங்காவின் மேற்குக் கரைகளில் ஒதுங்கி வருகின்றன. அதனால் நாட்டின் கடற்கரைச் சூழல் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் கறுப்பு நிறக் கழிவுகள், எரிந்த கப்பல் பாகங்களால் நிறைந்திருக்கும் கடற்கரையைச் சுத்திகரிப்பதில் ஈடுபட்டு வருகிறார்கள்.
“நாங்கள் உதவி கேட்டபோதே சூரத், ஹமாத் துறைமுகங்கள் எங்களை அங்கே செல்ல அனுமதி தந்திருப்பின் இந்த மோசமான அழிவைத் தடுத்திருக்கலாம்,” என்று கப்பலின் உரிமையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். London P&I Club காப்புறுதி பெற்ற அக்கப்பல் முழுவதுமாக எரிந்து அழிந்துவிட்டதாகவே கணக்கெடுக்கவேண்டுமென்று அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்