டிரம்ப்பையும் விட அதிகமான சீன நிறுவனங்களைக் “விரும்பத்தகாதவைகள்” பட்டியலில் சேர்க்கிறார் ஜோ பைடன்.
‘சீனாவின் இராணுவத்தொழில் நுட்பங்களுடன் தொடர்புடைய கண்காணிப்பு, உளவுக்கருவிகள் போன்றவைக்கான ஆராய்ச்சி, விற்பனை போன்றவைகளுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் அமெரிக்கர்கள் முதலீடு செய்வதைத் தடுக்கவேண்டும்,’ என்ற சுட்டிக்காட்டலுடன் 59 சீன நிறுவனங்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்திருக்கிறது அமெரிக்கா. சீனாவின் 31 நிறுவனங்களில் அமெரிக்கர்கள் முதலீடு செய்வதைத் தடுத்து உத்தரவிட்டிருந்தார் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.
“சீனாவுக்கு வெளியே தனது உளவு வேலைகளுக்காகப் பயன்படுத்தும் தொழில் நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவது மனித உரிமைகளுக்கு எதிரானது. அதை நாம் தடுக்கவேண்டும்,” என்கிறார் ஜோ பைடன். முகத்தை அடையாளம் கொண்டு மனிதர்களைக் கண்காணிக்கும் கருவிகளைச் சீனா உலகெங்கும் விற்பனை செய்து வருகிறது. தமது நாட்டின் சிறுபான்மையினர், எதிர்க்கட்சியினரைக் கண்காணிக்கவும், பழிவாங்கவும் அலையும் நாடுகளுக்கு அப்படியான தொழில்நுட்பக் கருவிகள் மிகவும் உதவியாக இருக்கின்றன.
விரைவில் நடக்கவிருக்கும் ஜி 7, மற்றும் நாட்டோ மாநாடுகளில் இதேபோன்ற முதலீட்டுத் தடுப்புக்களைச் செய்யும்படி ஐரோப்பா மற்றும் தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக்கொள்ளும் என்று தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்