எல் சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதிக்கு அடுத்ததாக அவரது மனைவிக்கும் 10 வருட சிறைத்தண்டனை.
2004 – 2009 வரை எல் சல்வடோரின் ஜனாதிபதியாக இருந்த அந்தோனியோ சகா 2016 இல் கைதுசெய்யப்பட்டு 2018 இல் அரசாங்கத்தின் பணத்தில் மோசடி, கையாடல் ஆகிய குற்றங்கள் செய்ததை ஒத்துக்கொண்டு 10 வருடச் சிறைத்தண்டனை பெற்றார். கையாடிய பணமான 260 மில்லியன் டொலர்களைத் திருப்பிக் கொடுக்கவேண்டுமென்றும் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
அவரது மனைவியான அனா லீஜியா டி சகோ அரச பணத்தில் கையாடிச் சொத்துச் சேர்த்துக்கொண்ட குற்றத்துக்காக 10 வருடச் சிறைத்தண்டனை பெறுகிறார். அத்துடன் கையாடிய 17.6 மில்லியன் டொலர்களை அரசுக்குத் திருப்பிக் கொடுக்கவேண்டுமென்கிறது நீதிமன்றம். அனாவின் சகோதரன் ஒஸ்கார் எல்கார்டோவும் சமீபத்தில் இதே போல அரச பணத்தைக் கையாடியதற்காகச் சிறைத்தண்டனை பெற்றிருக்கிறார்.
1999 – 2004 வரை ஜனாதிபதியாக இருந்த பிரான்சிஸ்கோ புளோரேஸ், மற்றும் 2009 – 2014 வரை ஜனாதிபதியாக இருந்த மௌரீஸியோ பூனெஸ் ஆகியோரும் அரச பணத்தில் மோசடிகள், கையாடல்கள் செய்ததற்காகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்