பொக்கோ ஹறாம் தீவிரவாதிகளின் தலைவன் எதிர்த்தரப்பினரால் கொல்லப்பட்டான்.

மேற்கு ஆபிரிக்க நாடுகளில் பொது மக்களிடையே மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்திவரும் இஸ்லாமியத் தீவிரவாதிகளில் பொக்கோ ஹறாம் அமைப்பினர் முக்கியமானவர்கள். அவர்களுக்குள் பிளவுகளும், அவர்களுக்கெதிராக ஐ.எஸ் என்றழைக்கப்படும் இஸ்லாமியக் காலிபாத் அமைக்கும் போரில் ஈடுபட்டு வரும் குழுவும் செயற்படுவதுண்டு. அப்படியான மோதலொன்றில் பொக்கோ ஹறாம் அமைப்பின் தலைவன் அபூபக்கர் ஷெக்காவு இரண்டு வாரங்களுக்கு கொல்லப்பட்டதாக எதிர்த்தரப்பினர் தெரிவிக்கிறார்கள்.

நைஜீரியாவின் வடகிழக்கில் போர்னோ பிராந்தியத்தில் பொக்கோ ஹறாம் அமைப்பின் தலைவன் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.எஸ் அமைப்பினரின் அப்பிராந்தியக் குழுவொன்று தெரிவித்திருக்கிறது. அபூபக்கர் ஷெக்காவு கொல்லப்பட்டதாக முன்பும் அறிவிக்கப்பட்டிருந்தாலும் இந்த முறை விபரமான தகவல்களை எதிர்க்குழுவினர் கொடுத்திருக்கிறார்கள். அவனை ஐந்து நாட்கள் தொடர்ந்து விரட்டி வேட்டையாடியதில் அவன் வெடிகுண்டொன்றை தானே வெடித்துத் தற்கொலை செய்துகொண்டதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். 

2009 இல் பொக்கோ ஹறாம் அமைப்பினரின் தலைவனாகினான் ஷெக்காவு. அவனது தலைமையில் அக்குழு சர்வதேச ரீதியில் அதன் கொடுமையான செயல்களுக்காகப் பிரபலமானது. நைஜீரியாவில் 2014 இல் அவர்களால் நடாத்தப்பட்ட பாடசாலைச் சிறுமிகள் கடத்தல் மிகவும் பிரபலமானது. நூற்றுக்கணக்கான சிறுமிகள் அச்சமயம் கடத்தப்பட்டார்கள். அதன் பின்னரும் அதுபோன்ற நடவடிக்கைகளில் அக்குழு ஈடுபட்டு வருகிறது. 

கிராமங்கள் சூறையாடப்படுவதும், கடத்தப்படும் சிறுவர், சிறுமியல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதும்,  கொல்லும் இயந்திரங்களாக மனம் மாற்றப்படுவதுமுண்டு. அச்சிறுமியர்கள் பாலியல் அடிமைகளாக அக்குழுவினரால் பாவிக்கவும் படுகிறார்கள். அதைத் தவிர பாடசாலைச் சிறார்களைக் கடத்திச் சென்று அதிகாரிகளிடமும், பெற்றோரிடமும் தண்டத் தொகை அறவிடுவதன் மூலமும் பொக்கோ ஹறாம் அமைப்பு செயல்பட்டு வருகிறது.

பொக்கோ ஹறாமுக்கும் ஐ.எஸ் அமைப்புக்குமிடையில் அவ்வப்போது நடக்கும் போர்களினால் சில கிராமங்களில் பெரும் பாதிப்புக்கள் உண்டாகுவதுண்டு. ஷெக்காவுவின் மரணத்தின் பின்னர் நைஜீரியாவில் நிலைமை வேறு வழியாக மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.எஸ் அமைப்பினர் ஆபிரிக்காவில் இனிமேல் நேரடியாக நாடுகளில் இராணுவங்களுக்கு எதிராகத் தாக்குதல்களில் ஈடுபடுவது அதிகரிக்கக்கூடும் என்று அவதானிகள் குறிப்பிடுகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *