உப ஜனாதிபதியாக, கமலா ஹாரிஸின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் தென்னமெரிக்காவை நோக்கி.
“லஞ்ச ஊழல்கள் புற்றுநோயாகி உள்ளேயிருந்து தென்னமெரிக்காவை அரித்துக்கொண்டிருக்கிறது. அந்த நிலைமையை மாற்றும் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமே அப்பிராந்தியத்தின் மக்களுக்கு எதிர்கால நம்பிக்கையை ஊட்டலாம்,” என்கிறார் ஜேர்சன் மார்சாக், லத்தீன் அமெரிக்க நாடுகளின் அபிவிருத்தி அமைப்பில் செயற்படுபவர். அந்த மாற்றத்தை உண்டாக்குவது அமெரிக்காவின் அவசியமாக இருக்கிறது.
அமெரிக்காவின் எல்லைகளில் வந்து குவிந்துகொண்டிருக்கும் லத்தீன் அமெரிக்க நாட்டு அகதிகளைக் கணிசமாகக் குறைப்பது ஜோ பைடன் அரசுக்கு அவசியமாகும். அமெரிக்க மக்களின் ஆதரவை நிலைப்படுத்திக்கொள்வதற்கு அது ஒரு அவசியமும் கூட. டிரம்ப் போன்ற அதிரடி நடவடிக்கைகள் எடுத்து, அகதிகளுக்கு அமெரிக்காவில் இடமில்லையென்று சொல்லாத அதே சமயம் லத்தீன் அமெரிக்காவில் சுபீட்சத்தை உண்டாக்கி அகதிகளின் வரவைக் கட்டுப்படுத்த ஜோ பைடன் அரசு விரும்புகிறது.
எனவே கமலா ஹாரிஸின் தென்னமெரிக்க விஜயத்தின் முக்கிய நோக்கம் குவாத்தமாலா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளுடன் நல்லுறவைக் கட்டியெழுப்புவதாகும். அந்த நாடுகளுடைய பொருளாதார அபிவிருத்திக்கு உதவுவதன் மூலம் அந்தந்த அரசுகள் தமது அமெரிக்காவை நோக்கிய எல்லைகளை மூடிவைக்கும்படி கோரலாம் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. கடந்த வாரம் 500,000 கொவிட் 19 தடுப்பு மருந்துகளை மெக்ஸிகோவுக்கும், 100,000 தடுப்பு மருந்துகளை குவாத்தமாலாவுக்கும் தருவதாக கமலா ஹாரிஸ் அறிவித்திருந்தார்.
அதைத் தவிர எல் சல்வடோர், ஹொண்டுராஸ் நாட்டில் லஞ்ச ஊழல்கள் குற்றஞ்சாட்டப்பட்ட நிலைமையிலிருக்கிறார்கள். அந்த நாடுகளிலும் அரசியல் மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக கமலா ஹாரிஸ் முயற்சி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்