ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமுக்குத் தீவைத்து அழித்ததாக நான்கு ஆப்கான் இளைஞர்கள் சிறைக்கனுப்பப்பட்டார்கள்.
கிரீஸின் லெஸ்போஸ் தீவிலிருந்த மூரியா அகதிகள் முகாம் ஐரோப்பாவிலேயே மிக அதிகமான அகதிகளைக் கொண்டிருந்தது. 2013 இல் 3,000 பேருக்காகக் கட்டப்பட்ட அந்த முகாம் அளவுக்கதிகமானவர்கள் வாழ்ந்ததால் பல பிரச்சினைகளை எதிர்கொண்டது. 2020 செப்டெம்பர் 8, 9 திகதிகளில் ஏற்பட்ட தீவிபத்துக்களில் எரிந்து அழிந்தது. அதற்கு நெருப்பு வைத்ததாக நான்கு ஆப்கானர்களைத் தலைக்குப் பத்து வருட சிறைத்தண்டனை விதித்து கிரேக்க நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
மார்ச் மாதத்தில் மேலுமிரண்டு ஆப்கான் இளைஞர்கள் இதே குற்றத்திலீடுபட்டதாகத் தலா ஐந்து வருடம் சிறைத்தண்டனை பெற்றார்கள். இளைஞர்களில் மூவர் கைது செய்யப்பட்டபோது அவர்கள் பதினெட்டு வயதாகியிருக்கவில்லையென்றும், அவர்களுக்குச் சரியான நீதிவிசாரணை கிடைக்கவில்லையென்றும் அவர்களது வழக்கறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
2015 இல் மிகப் பெருமளவில் அகதிகள் கிரீஸுக்குள் நுழைந்ததால் மூரியா முகாமில் அங்கிருக்கக் கூடியவர்களை விட ஆயிரக்கணக்கில் குடியமர்த்தப்பட்டார்கள். பல நூறு தற்காலிகக் கூடாரங்களில் அகதிகள் வாழவேண்டியிருந்தது. அவர்களுக்கான அடிப்படை வசதிகள் அங்கே கிஞ்சித்தும் இருக்கவில்லையென்று பல தடவைகள் அதன் அதிகாரிகள் குறிப்பிட்டும், கூட கிரேக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்கர்களெல்லாரும் ஒரே இடத்தில் வாழவேண்டிய நிலைமையில் அவர்களுக்கிடையே இருந்த பேதங்களால் வன்முறைகள் அங்கே அதிகரித்தன. அச்சமயத்தில் கொரோனாத் தொற்றுக்களும் அகதிகளிடையே பரவ ஆரம்பித்திருந்தன.
சுமார் 200 பேரைத் தனிமைப்படுத்த முற்பட்டபோது அவர்கள் அதை மறுத்து ஏற்படுத்திய கலவரங்களால் அங்கே பிரச்சினைகள் உண்டாகின. அதனைத் தொடர்ந்தே தீவைப்புக்களும் நடந்தன என்று சில சாட்சிகள் தெரிவிக்கிறார்கள்.
தீயால் அந்த முகாம் எரிந்து நாசமாகியபின் சுமார் 13,000 அகதிகள் பல நாட்களாக அங்கே தலைக்கு மேல் எவ்வித கூடாரமுமில்லாமல் வாழ நேர்ந்தது. முதியோர், பெண்கள், குழந்தைகள், குடும்பங்களெல்லாருமே அந்தச் சமயத்தில் அந்த நிலைமையை அனுபவிக்க வேண்டியதாயிற்று. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் கிரீஸ் அதன் பின் அவர்களை வெவ்வேறு கிரேக்க தீவுகளில் தற்காலிக அகதிகள் முகாம்கள் கட்டி வசிக்க ஒழுங்குசெய்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்