“அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையே தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகள் ஏதுமில்லை!” எர்டகான்
திங்களன்று நடந்த நாட்டோ அமைப்பின் அங்கத்துவர்களுக்கு இடையேயான முக்கிய சந்திப்பு ஒரு பக்கமிருக்க, ஜோ பைடனும், எர்டகானும் தனியே சந்தித்துக்கொண்டபோது விவாதித்துக்கொண்ட விடயங்களும் சர்வதேச முக்கியம் வாய்ந்தவையே. அச்சந்திப்பின் பின்னர் இரண்டு தலைவர்களும் தமது நாடுகளுக்கிடையே சமீப வருடங்களில் ஏற்பட்டிருக்கும் மனக்கசப்புக்களை ஒதுக்கி வைத்துவிட்டுக் கூட்டுறவை அதிகரித்துக்கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டனர்.
எர்டகான், “மனம் திறந்த, வெற்றிகரமான” வகையில் தமது சம்பாஷணைகள் இருந்ததாகவும் “சமமான கௌரவத்துடன் எல்லா வழிகளிலும் புதிய உறவை உண்டாக்கிக்கொள்ளும்” முடிவு எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். ஆனால், இரண்டு தலைவர்களும் தாம் எந்தெந்த விடயங்களில் முடிவு எடுத்திருக்கிறோம் என்பதைப் பற்றிக் குறிப்பிடவில்லை.
“எமது நாடுகள் இரண்டுக்குமே விசாலமான நோக்கங்கள் இருக்கின்றன. எல்லா விடயங்களைப் பற்றியும் பேசினோம். எனது அதிகாரிகளும், துருக்கிய அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள். நாம் நிச்சயமாக முன் நோக்கிச் செல்வோம்,” என்பது ஜோ பைடனின் செய்தியாக இருந்தது.
சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் துருக்கியும் அமெரிக்காவும் வெவ்வேறு பாகங்களை ஆதரிக்கின்றன. அத்துடன் துருக்கி தமது நாட்டின் முக்கிய எதிரிகளாகக் கருதும் குர்தீஷ் இனத்தவரின் இயக்கங்களை அமெரிக்கா ஆதரித்து, ஆயுதங்களையும் கொடுத்து வருகிறது.
தனது நாட்டோ நண்பனான துருக்கி கடந்த வருடம் ரஷ்யாவின் S-400 போர் விமானங்களைக் கொள்வனவு செய்ததால் கோபமடைந்த அமெரிக்கா அவர்களை F-35 என்ற நாட்டோவின் போர் விமானத் தொழில்நுட்பக் கூட்டணியிலிருந்து விலக்கிவிட்டது.
துருக்கியருக்குக் கண்ணுக்குள் முள் குத்துவது போன்று ஏபரல் மாதம் ஜோ பைடன் அரசு “ஆர்மீன இனக்கொலை” என்று 1915 – 1917 காலத்தின் ஒத்தமானியப் பேரரசு தனது நாட்டின் ஆர்மீனியர்கள் மீது நடாத்திய திட்டமிட்ட கொலைகளை அதிகாரபூர்வமாகக் குறிப்பிட்டது.
காஸாவில் சமீபத்தில் இஸ்ராயேல் நடாத்திய தாக்குதல்களில் இஸ்ராயேலின் பக்கம் நின்றது அமெரிக்கா. எர்டகானோ காஸா – பலஸ்தீனர்களை உற்சாகப்படுத்தினார். அதனாலும் இவ்விரண்டு நாடுகளுக்குமிடையேயான மனக்கசப்புகள் தொடர்ந்தன.
ஞாயிறன்று எர்டகான் அமெரிக்காவிலிருந்து வெளியேறும் ஆப்கானிஸ்தானில் தனது நாட்டின் உதவியைக் கொடுக்கமுடியும் என்று பிரேரித்திருக்கிறார். துருக்கியின் இராணுவம் தொடர்ந்தும் ஆப்கானிஸ்தானில் இருக்குமானால் அதற்கு அங்கேயிருந்து வெளியேறும் அமெரிக்காவின் உதவி அரசியல், இராணுவத் தளபாடங்களுக்கான போக்குவரத்து போன்றவற்றில் தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்