“இஸ்ராயேலை முழுமனதுடன் விரும்பாத அமெரிக்க யூதர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை” – டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பழமைவாத யூத சஞ்சிகையொன்றுக்குப் பேட்டியளித்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், மீண்டும் தனக்கு ஆதரவளிக்காத அமெரிக்க யூதர்கள் மீதான தனது அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார்.
“நான் ஜெருசலேமைத் தலைநகராக்க ஆதரவளித்தேன், கொலான் பிராந்தியம் இஸ்ராயேலுக்கானது என்று அறிவித்தேன், அவர்களின் எதிரிகளான ஈரானுடனான அணுசக்தி ஆராய்ச்சி ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தேன். மேலும் பல விடயங்களை நான் யூதர்களுக்காகச் செய்திருக்கிறேன். ஆனாலும் அமெரிக்க யூதர்களில் பலர் டெமொகிரடிக் கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்கள் இஸ்ராயேலை மனதார ஆதரிக்காததே,” என்று டிரம்ப் தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
தான் ஒரு முழு இஸ்ராயேல் ஆதரவாளராகச் செயற்பட்டும் கூட தனக்கு அமெரிக்க யூதர்களில் 25 விகிதமானவர்களே வாக்களித்திருப்பதாக அவர் அதிருப்தியடைந்திருக்கிறார். கொலான், ஜெருசலேம் இஸ்ராயேலுக்குரியவை என்று அமெரிக்க நிலைப்பாடு இருப்பினும் கூடச் சர்வதேச ரீதியில் அவையிரண்டும் தொடர்ந்தும் இஸ்ராயேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாகங்களாகவே உத்தியோகபூர்வமாகக் கருதப்படுகின்றன.
2019 லேயே “எனக்கு வாக்களிகாத எந்த அமெரிக்க யூதருக்கும் பொதுவான சரித்திர அறிவு கிடையாது, அல்லது அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களல்ல,” என்று டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். பழமைவாத யூதர்களின் ஊடகங்கள் டிரம்ப்பைப் பல தடவைகள் “இஸ்ராயேலின் அரசன்,” என்று குறிப்பிட்டு உசுப்பேத்திவந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்