விரைவில் காலாவதியாகவிருக்கும் தடுப்பு மருந்துகளைக் கொடுத்துப் பின்பு பாலஸ்தீனா பெறவிருக்கும் அதே மருந்துகளை இஸ்ராயேல் பெறும்.
பெரும்பாலான தமது குடிமக்களுக்குத் தடுப்பு மருந்துகளை வெற்றிகரமாகக் கொடுத்துவிட்ட இஸ்ராயேல் பாலஸ்தீனர்களுக்கு அதே வகையில் அவைகளைக் கொடுக்காதது பற்றிப் பல விமர்சனங்களும் தொடர்கின்றன. புதிதாக இஸ்ராயேலில் பதவிக்கு வந்திருக்கும் அரசு ஒரு தம்மிடமிருக்கும் ஒரு மில்லியன் பைசர் – பயோன்டெக் தடுப்பு மருந்துகளைப் பாலஸ்தீன அதிகாரத்திடம் கையளிப்பதாக உடன்படிக்கை செய்திருக்கிறது.
குறிப்பிட்ட ஒரு மில்லியன் தடுப்பு மருந்துகளும் விரைவில் காலாவதியாகிவிடும். தனது குடிமக்களில் 85 % பேருக்கு ஏற்கனவே தடுப்பூசி கொடுத்துவிட்ட இஸ்ராயேல் செப்டெம்பர் மாதமளவில் பாலஸ்தீனர்கள் பெற்றுக்கொள்ளவிருக்கும் தடுப்பு மருந்துகளை அவர்களிடமிருந்து பதிலாக வாங்கிக்கொள்ளும் என்கிறது அந்த ஒப்பந்தம்.
பாலஸ்தீனப் பகுதிகளில் ஒன்றான காஸாவில் ஆட்சியிலிருப்பது ஹாமாஸ் இயக்கமாகும். அவ்வியக்கம் தீவிரவாத இயக்கமென்று சர்வதேச ரீதியில் கணிக்கப்படுவதால் அவர்களுடன் ஒன்றிணைந்து பணியாற்ற இஸ்ராயேல் மறுத்தே வருகிறது. அத்துடன் பாலஸ்தீனாவின் மற்றைய பகுதிகளில் ஆட்சியிலிருக்கும் பத்தா அமைப்பும் ஹமாஸுடன் ஒன்றிணைந்து செயற்படுவதில்லை. பத்தா அமைப்பின் பகுதியில் பாலஸ்தீன அதிகாரமே பொறுப்புகளுக்குரியது. இஸ்ராயேலுடன் இணைந்து அவைகளைக் கவனிக்கலாம் என்கிறது அவர்களிடையேயான ஒப்பந்தம். ஆனாலும் அவர்களுக்கான தடுப்பு மருந்துகளை இஸ்ராயேல் கொடுக்கவில்லை. காஸா வாழ்பவர்களுக்கான தேவைகளை ஹமாஸின் அனுமதியுடன் மனிதாபிமான அமைப்புக்களே செய்து வருகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்