ஹொங்கொங்கில் சுதந்திரக் குரல்களின் வடிகாலாக இருந்த அப்பிள் டெய்லி பத்திரிகை மயானத்துக்கு அனுப்பப்படுகிறது.
சுமார் ஒரு வருடமாகப் படிப்படியாகத் தனது பிடியை ஹொங்கொங்கில் இறுக்கி வரும் சீனாவின் புதிய அதிரடி நடவடிக்கை அங்கிருந்து வெளிவந்துகொண்டிருந்த மிகப்பெரும் பத்திரிகையைத் தாக்கியிருக்கிறது. கடந்த வாரம் சீனாவின் அதிகாரிகள் அப்பிள் டெய்லி காரியாலயத்தின் மீது திடீர் பரிசோதனை நடாத்தினார்கள். ஐந்து தொழிலாளிகள் அங்கிருந்து கைதுசெய்யப்பட்டார்கள்.
“அன்னிய நாட்டினரின் கையாளாகச் செயல்படுதல்,” என்ற குற்றஞ்சாட்டிப் ஜனநாயகத்துக்காகக் குரல்கொடுத்து வந்த பலரும், ஊடகங்களும் கொங்கொங்கில் கைதுசெய்யப்பட்டு வருகிறார்கள். ஊடகங்களின் தொழிலாளர்கள், பத்திரிகையாளர்கள், அதிபர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் நிறுத்தித் தண்டிக்கப்படுகிறார்கள். அவர்கள் மீது உளவாளிகள் என்றும், நாட்டின் பாதுகாப்புச் சட்டங்களுக்கு எதிராகச் செயற்படுகிறவர்கள் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
“அப்பிள் டெய்லி” பத்திரிகையில் சுமார் 600 பேர் வேலைசெய்து வந்தார்கள். கடந்த வாரச் சோதனையை அடுத்து “நாம் நீண்டகாலத்துக்கு இயங்கமுடியும் என்று தோன்றவில்லை,” என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. அதன் உரிமையாளரும், ஜனநாயக உரிமைகள் கோரில் குரல் கொடுத்து வந்தவருமான ஜிம்மி லாய் ஏற்கனவே கைது செய்யப்பட்டுச் சிறைத்தண்டனை பெற்றிருக்கிறார்.
பத்திரிகையின் சொத்துக்கள் அனைத்தும் அரசினால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. எனவே இனிமேல் பத்திரிகையாகவோ அல்லது இணையத்தளத்தில் செயற்படவோ அந்த நிறுவனத்தின் ஊடகங்களுக்கு இயலாது என்று அறிவிக்கப்பட்டது. தமது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஆபத்துக்கள் வராதிருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அப்பிள் டெய்லி அறிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்