ஐந்து மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பசி, பட்டினியால் இறக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 5.7 மில்லியன் குழந்தைகளும், 13 மில்லியன் 18 வயதுக்குட்பட்டவர்களும் உணவின்மை, போதிய ஊட்டச்சத்தின்மை ஆகியவைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறர்கள் என்று “Save the children” என்ற மனிதாபிமான அமைப்பின் அறிக்கை குறிப்பிடுகிறது. 2000 ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக இப்படியொரு நிலைமை ஏற்பட்டிருக்கக் காரணங்கள் முக்கியமாகக் கொரோனாத் தொற்றுக்காலம், போர்கள், காலநிலை மாற்றம் ஆகியவையாகும்.
“சூறாவளிகள், வெள்ளங்கள், வரட்சி, போர்கள், கொரோனாத் தொற்றுக் கட்டுப்பாடுகள் ஆகியவை விவசாயத்துக்கு மிகப்பெரும் பாதிப்புக்களை உண்டாக்கியிருக்கின்றன. அதனால், உணவுத் தட்டுப்பாடு கடுமையாகியிருக்கிறது. உண்மையில் உலகில் எல்லோருக்கும் தேவையான உணவுத் தயாரிப்பு இருக்கும் இச்சமயத்தில் உண்மையான பிரச்சினை “சரிசமமான முறையில் உணவுப்பகிர்தல்” இல்லாமையேயாகும். அதுவே இந்தப் பிள்ளைகளின் பசி, பட்டினிக்குக் காரணமாகும். நாம் வேகமாக இந்த நிலைமையை மாற்றும் நடவடிக்கைகளில் இறங்கவேண்டும்,” என்று அந்த அமைப்பின் நிர்வாக அதிபர் இங்கர் ஆஷிங் அறைகூவல் விடுத்திருக்கிறார்.
கொங்கோ குடியரசில் உலகின் மிக அதிகமான ஐந்து வயதுக்குட்பட்டவர்கள் பசி, பட்டினியால் இறப்பை எதிர்நோக்குகிறார்கள். சுமார் 1.2 மில்லியன் குழந்தைகள். யேமனில் 700,000 குழந்தைகளும், ஆப்கானிஸ்தானில் அரை மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளும் அதே போன்று பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதைத் தவிர சுமார் 150 மில்லியன் குழந்தைகள் மிகக் குறைவான உணவையே பெற்று வருகிறார்கள். அதன் பக்க விளைவுகளான பல வியாதிகளால் மேலும் பல மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுக் கரும் நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது உலகெங்கும் குழந்தைகளுக்கான உதவிகளில் ஈடுபடும் அந்த மனிதாபிமான அமைப்பு.
சாள்ஸ் ஜெ. போமன்