தென்னாபிரிக்காவின் அதிக மக்கள் தொகையுள்ள மாகாணத்தில் கல்விச் சேவையிலிருக்கும் சுமார் 10,000 தடுப்பூசி எடுக்க மறுப்பு.
கொவிட் 19 ஆல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுத் தடுப்பு மருந்துகளின் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் தென்னாபிரிக்காவில் அதைப் போட்டுக்கொள்ள மறுப்பவர்களும் புதுப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறார்கள். கௌதாங்க் என்ற நாட்டின் மிகவும் மக்கள் தொகையுள்ள, மக்கள் நெருக்கமாக வாழும் மாகாணத்தில் ஆசிரியர்கள், உதவியாளர்களில் சுமார் 10,000 பேர் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ள மறுத்து வருகிறார்கள். அதே மாகாணம் தான் தென்னாபிரிக்காவில் கொரோனாத் தொற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்டும் இருக்கிறது.
தென்னாபிரிக்காவில் மூன்றாவது அலையாகப் பரவிவரும் கொரோனாத் தொற்றுக்கள் முன்னரைவிட அதி மோசமான பாதிப்புக்களை, அதி வேகமாக உண்டாக்கி வருகின்றன. உலக நாடுகள் பலவும் தென்னாபிரிக்காவில் திரிபடைந்த கிருமிகளின் தாக்குதல்களைக் கண்டு அந்த நாட்டவருடன் போக்குவரத்துகளை நிறுத்தியிருக்கிறார்கள். அதைத் தவிர டெல்டா திரிபும் தென்னாபிரிக்காவில் கொரோனாத் தொற்றின் வேகம் அதிகரித்திருக்கக் காரணமென்று உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு குறிப்பிடுகிறது.
கௌதாங் மாகாணத்தில் தினசரி பத்தாயிரம் பேருக்குத் தொற்றுக்கள் பரவிவருகின்றன. அதனால், பாடசாலைகள் மூடப்பட்டுக் கடுமையான பொது முடக்க நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அங்கே கல்வித்துறையில் இருக்கும் 120,000 பேரில் சுமார் 53,000 பேர் தடுப்பு மருந்துகளைப் பெற்றிருக்கிறார்கள். அதைப் பெற்றுக்கொள்வது கட்டாயமில்லை. அவர்களெல்லோரும் தமது தடுப்பூசிகளைப் பெற்றபின்னரே பாடசாலைகளைத் திறக்கலாம் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், சுமார் 10,000 பேர் தாம் அதை எடுக்கமாட்டோம் என்று வெவ்வேறு காரணங்கள் கூறி மறுத்து வருவது நாட்டைச் சகஜ நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்கும் அரசின் திட்டங்களுக்கு இடையூறாக இருப்பதாகச் சுட்டிக் காட்டப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்