இந்திய நிறுவனமொன்று கொவிட் 19 நோயாளிகளை 90 மணிகளில் சுகமாக்கும் மருந்தொன்றைப் பரிசோதித்து வருகிறது.
மஹாராஷ்டிராவில், கோலாப்பூரில் இருக்கும் நிறுவனமொன்று கொவிட் 19 நோயாளிகளைக் குணமாக்கும் மருந்தொன்றைக் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. iSera Biologicals என்ற பெயருடைய இந்த நிறுவனத்தின் மருந்தானது அந்த நோயுள்ள ஒருவரை 72 – 90 மணிகளில் குணப்படுத்திவிடுவதாக ஆரம்பகட்ட ஆராய்ச்சிகள் காட்டுவதாகத் தெரிகிறது.
குதிரையின் எதிர்ப்புச் சக்தியிலிருந்து பெறப்பட்ட இந்த மருந்தானது மென்மையான, அல்லது நடுத்தர பாதிப்பை கொவிட் 19 ஆல் பெற்றவர்களைக் குணப்படுத்துவதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. குறிப்பிட்ட மருந்தை நோயாளிகளில் பரிசீலனை செய்வதின் முதல் கட்டம் நடந்து வருவதாகவும் இதுவரை அதன் பலன் மிகவும் நன்றாக இருப்பதாகவும் அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அஸ்ரா செனகா நிறுவனத்தின் தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்கும் செரும் இன்ஸ்டிடியூட் iSera Biologicals நிறுவனத்துடன் குறிப்பிட்ட மருந்து ஆராய்ச்சியில் உதவியதாகத் தெரிகிறது. செரும் இன்ஸ்டிடியூட்டே அந்த மருந்துக் கண்டுபிடிப்புக்கான எதிர்ப்புக் கிருமிகள், தொழில்நுட்பம் ஆகியவற்றில் உதவியிருக்கிறது. இம்மருந்தால் நோயாளிகள் குணமடைந்திருப்பதுடன் கொரோனாக் கிருமிகள் அவர்களிடமிருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும் நிறுவனத்தின் தொலைக்காட்சி நேர்காணலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்