T20 உலகக்கிண்ணம் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில்
T20 உலகக்கிண்ண துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடக்கவுள்ளது.முன்னதாக இந்தப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற ஏற்பாடாகியிருந்த போதிலும் உலகின் சவாலான கோவிட் 19 பெருந்தொற்று இந்தியாவில் அதிகரித்த சூழ்நிலையிலேயே அந்தப் போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானுக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் அதற்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெளியிட்டுள்ளது.ஒக்டோபர் மாதம் 17ம் திகதி போட்டிகள் தொடங்கும் நிலையில் அது நவம்பர் மாதம் 14ம் திகதி இறுதிப்போட்டியுடன் நிறைவுக்கு வரும்.
முதற்கட்டமாக A மற்றும் B பிரிவுகளாக நடக்கும் போட்டிகளில் குழுவில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னைறி குழு-12 அணிகளில் ஒன்றாக இணையும். இரு பிரிவுகளாக்கப்பட்ட இந்த அணிகள் தங்கள் பிரிவு அணிகளுக்குள் மோதி முதலிரண்டு இடங்களைப்பிடித்து அரையிறுதிக்கு முன்னேறும்.
முதலாவது போட்டியில் பப்புவா நியூகினியா அணியை எதிர்த்து போட்டி நடைபெறும் நாடான ஓமான் மோதவுள்ளது.
தொடர்ச்சியான கிரிக்கெட் போட்டிகளாக அமையும் இந்த போட்டிகளை தொடர்ந்து இறுதிப்போட்டி நவம்பர் மாதம் 14 ம் திகதி டுபாயில் நடைபெறவுள்ளது.
விறுவிறுப்பான போட்டிகளாக அமையும் என எதிர்பார்க்கப்படும், இந்த போட்டிகளுக்கான அணிகளை தெரிவு செய்யும் நிலையில் பங்குபற்றும் நாடுகள் மிக எதிர்பார்ப்புகளோடு தயாராகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.