காலமும், தேவைகளும் மாறும்போது கௌரவத்தைப் பார்க்காமல் டுபாயும் மாறுகிறது.

ரமஸான் நோன்புக் காலங்களில் திறந்திருக்கும் உணவு விடுதிகள் தங்களை பர்தா போட்டு மறைத்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை என்று அறிவித்திருக்கிறது டுபாய் அரசு. நோன்பிருக்கும் சமயத்தில் பசியுடனிருப்பவர்களின் பார்வைக்கு உணவுக்கடைகள் தெரியாமல் திரையால் மறைக்கப்பட்டிருக்கவேண்டுமென்று இதுவரையிருந்த கட்டுப்பாடு கைவிடப்பட்டிருக்கிறது.

எரிநெய் வருமானம் வேகமாகக் கவிழ்ந்து வருவதால் தமது வருமானங்களுக்கான துறைகளை மேம்படுத்தவேண்டிய நிலையிலிருக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் டுபாய் சுற்றுலாப் பயணிகளை உலகெங்குமிருந்து ஈர்ப்பதில் முக்கிய கவனமெடுத்து வருகிறது. அதற்கு வாகாகவே 2016 இல் பகல் நேரத்தில் மதுவிற்பனையை அனுமதித்தது. 

நோன்பு மாதத்தில் முஸ்லீம்கள் பரவலாகப் பகலில் விரதம் அனுஷ்டிக்கிறார்கள். உணவை மட்டுமன்றி நீரையும் அச்சமயத்தில் அவர்கள் அருந்தலாகாது. முஸ்லீம் நாடாக இருப்பினும் சுற்றுலாப் பயணிகளும், வெளி நாட்டுத் தொழிலாளர்கள் பலரும் வாழும் டுபாயில்  ரமஸான் மாதத்தில் சுற்றுலாப்பயணிகள் வருவது குறைவு. ரமஸான் கட்டுப்பாடுகள் சுற்றுலாப்பயணிகளுக்கு இடையூறாக இருப்பதை உணர்ந்தே டுபாய் இந்த மாற்றத்தை அமுலுக்குக் கொண்டுவருவதாக அறிவித்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *